யாழ்ப்பாணம் நகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் தற்போதைய நிலைமைகளை நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை விரைவில் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
ஆளுநர் அவர்களும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளும் இணைந்து இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டனர்.
யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள் கடந்த 20ஆம் திகதி ஆளுநரைச் சந்தித்தபோது, நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர். இதன்போது, கட்டடத் தொகுதியை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்திருந்தார். அதற்கமையவே இன்றைய களப்பயணம் இடம்பெற்றது.
களப்பயணத்தின்போது, கட்டடத் தொகுதி முறையாகப் பராமரிக்கப்படாமை, பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமை, புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாமை, வர்த்தகர்கள் தமது கடைகளைப் புனரமைப்பதற்கு அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மலசலகூடங்கள், பயன்பாடின்றிக் காணப்படும் கட்டடப் பகுதிகள் மற்றும் பாதுகாப்புக்கான வாயில் கதவுகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை வணிகர் கழகப் பிரதிநிதிகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். ஆளுநர் அவற்றை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிடமிருந்து வாடகையாகப் பெருமளவு நிதி யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைக்கின்ற போதிலும், கட்டடத் தொகுதியைப் புனரமைப்பதிலும் பராமரிப்பதிலும் போதிய கவனம் செலுத்தப்படாமை குறித்து வர்த்தகர்கள் கவலை வெளியிட்டனர். வாடகை வருவாயில் ஒரு பகுதியை இக்கட்டடத் தொகுதியின் பராமரிப்புக்காக ஒதுக்கினாலேயே பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை விரைவில் நடத்தி, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் எனப் பிரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
ஆளுநரின் இக் களப்பயணத்தில் ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.






