12 health eng

வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம். இவற்றை மாற்றியமைப்பதற்கு, எங்கள் சமூகத்துக்கு போசாக்கின் மகத்துவத்தை உணர்த்தும் இத்தகைய கண்காட்சிகளும் நிகழ்வுகளும் வரவேற்கத்தக்கன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ‘தேசிய போசாக்கு மாதம்’ மற்றும் ‘ENOUGH’ பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன் தாய்மார்க் கழகங்கள் இணைந்து நடாத்திய போசாக்குக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (05.08.2026) புதன்கிழமை காலை வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் மேலும் குறிப்பிட்டதாவது:

போர்க் கால இடம்பெயர்வுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகக் கடந்த காலத்தில் பலரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த நிலையிலும், இன்றும் சிலர் இத்தகைய குறைபாடுகளுடன் காணப்படுவதை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். போசாக்கின்மையால் பிறக்கும் குழந்தைகள் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் தொடர்ந்தும் பின்தங்கும் நிலையே ஏற்படும்.

இன்று இளைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அரசு மதிய உணவுக்காக பெருமளவு நிதியை ஒதுக்குகின்ற நிலையில், பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அவசியமான போசாக்குள்ள உணவுகளைத் திட்டமிட்டு வழங்குவதன் மூலமே அவர்களை ஆரோக்கியமானவர்களாக உருவாக்க முடியும்.

இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நந்தகுமார் மற்றும் அவரது உத்தியோகத்தர்களையும், இப்பகுதியில் திறம்படச் செயற்பட்டுவரும் வேள்ட் விசன் அமைப்பினரையும் நான் பாராட்டுகிறேன். பாரம்பரிய உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், என்றார்.

சங்கானையின் 35 தாய்மார்கள் கழகங்களாலும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் வழிகாட்டலிலும் பனைசார் உணவுகள், கடல்சார் உணவுகள், சிறுதானியங்கள், மரக்கறி இலைவகைகள், பால் மற்றும் முட்டைசார் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறப்பம்சமாக பாடசாலை சிற்றுண்டிச் சாலை மாதிரி அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், கோழி, ஆடு, தாரா, காடை வளர்ப்பு போன்ற விலங்கு வேளாண்மை மூலமான பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் இரசாயன உரங்களற்ற சுகவாழ்வுத் தோட்ட முறைகளும் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது கௌரவ ஆளுநரிடம் இரண்டு முக்கிய கோரிக்கை மனுக்கள் கையளிக்கப்பட்டன. ஒன்று, வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்துவது தொடர்பானது. மற்றையது, சங்கானை பிரதேச மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவது மற்றும் அதன் ஆளணிப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வது தொடர்பிலாகும்.

கண்காட்சியில் கலந்துகொண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் பயனடைந்தனர். தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்புக் கலை பயிற்சிப் பரீட்சையில் தேச்சிபெற்ற 400 பேருக்கு ஆளுநர் மற்றும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆரம்ப மழலைப் பராமரிப்புத் தொடர்பான இறுவட்டும் வெளியிடப்பட்டு ஆளுநரால் உத்தியோகபூர்வமாகக் கைளிளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலாளர் திருமதி உ.கவிதா, வலிகாமம் மேற்கு பிரதேச சபை கௌரவ தவிசாளர் ச.ஜெயந்தன், வேள்ட் விசன் வட மற்றும் வடமேற்கு வலய முகாமையாளர் அ.ஜூட் நிசாந்தன், யாழ்ப்பாணம் திட்ட முகாமையாளர் அ.அன்ரன் ரோய், மருத்துவமனை பொறுப்பதிகாரி, மேற்பார்வை சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.