15 health Review eng

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இம்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய முறையில் விரைந்து பயன்படுத்தி திட்டங்களை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு மற்றும் அதன் கீழான மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம், மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம் ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (07.10.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே இந்தப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் தற்போதைய முன்னேற்றம், நடைமுறைப்படுத்தலில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் தனித்தனியாக ஆராயப்பட்டன.

கடந்த மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் காணப்பட்ட நிலவரத்துடன் ஒப்பிடுகையில், மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் இம்முறை சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியதுடன், ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாகவும் உரிய காலப்பகுதிக்குள்ளும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்காக அடுத்த ஆண்டில் அண்ணளவாக 1,700 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில், தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி ஆணைக்குழுவிடம் இவ்விடயத்தை விசேடமாக முன்வைப்பதுடன், மத்திய சுகாதார அமைச்சிடமும் தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தவறான முடிவெடுப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆகியன இணைந்து இதுதொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நடைமுறைச் செயற்பாட்டு வழிமுறைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான உயிரிழப்புகள் தொடர்பான விரிவான ஆய்வுகள் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செயற்றிட்டங்களின் முழுமையான விளைவுகள் வெளிப்படுவதற்கு காலம் தேவைப்படலாம் என்றாலும், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயத்தின் தீவிரத்தன்மை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலும் காணப்படுவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை மாதிரியாகக் கொண்டு மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இதுதொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் தற்போது உளவளத் துணையாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இல்லாத நிலை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக புதிய ஆளணி உருவாக்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைப்பதுடன், வடக்கு மாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் துறைசார் கற்கைகளை நிறைவு செய்தவர்களில் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்து மருத்துவமனைகளுடன் இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களை பயிற்சி அடிப்படையில் உடனடியாக சேவையில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே உயிருக்கு ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாகாண சுகாதாரத் திணைக்களமும் இச்செயற்பாடுகளில் இணைந்து செயற்படுமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் ஆணையாளர், கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.