விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஐந்து நிதி மூலங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 516 வேலைத்திட்டங்கள் 4,081 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் நடைமுறைப் பயன்களை முறையாக ஆவணப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (07.10.2026) புதன்கிழமை ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே இப்பணிப்புரை வழங்கப்பட்டது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரச நிதியில் பெருமளவு முதலீடு செய்யப்படும் நிலையில், திட்டங்கள் நிறைவு பெற்றன என்ற தகவலுடன் மாத்திரம் செயற்பாடுகள் முடிவடையக் கூடாது எனத் தெரிவித்த ஆளுநர், ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம், கிடைத்த பயன் மற்றும் அதன் சமூக–பொருளாதார விளைவுகளைத் தெளிவாகப் பதிவு செய்யும் ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான கிரவல் கிடைப்பதில் நிலவும் சிரமங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, திட்டங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நவீன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட 17 திட்டங்களில் பெரும்பாலான திட்டங்களுக்கான கள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கள ஆய்வுகளின் அடிப்படையிலான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை, குறிப்பாக எல்நினோ காலநிலையால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நன்னீர் மீன்குஞ்சுகளை குளங்களில் விடும் நடவடிக்கை தற்போதைய குளங்களின் நீர்மட்ட நிலைமையை கருத்திற்கொண்டு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பருவமழைக்குப் பின்னர் பொருத்தமான காலப்பகுதியில் அவற்றை குளங்களில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட நித்தகைக்குளத்தின் ஊடாக இம்முறை அதிகளவில் நெற்செய்கையை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், விசுவமடு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அம்மாச்சி உணவகங்களை ஒரே வடிவமைப்பிலும் ஒரே தோற்றத்திலும் பேணுவதற்கான நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். இதன் மூலம் அம்மாச்சி உணவகங்களின் அடையாளம், பொதுமக்கள் மத்தியில் அவற்றின் காட்சித் தன்மை மற்றும் சேவைத் தரத்தை ஒரே நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டிற்கான திட்டங்களைத் தயாரிக்கும் போது நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, நிரல் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் ஒரே வடிவமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இந்த மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


