33 ppt hospital eng

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆளணி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (23.11.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆளணிப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் மக்களுக்கான மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருவதற்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சீ-ஆர்ம் மருத்துவ இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.

இதன்போது, மருத்துவமனையின் அத்தியட்சகரும் மருத்துவ நிபுணர்களும் ஆளணி தேவைகள் தொடர்பில் விளக்கமளித்தனர். ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்களுடன் சேவைகள் வழங்கப்பட்டபோது இருந்த ஆளணி ஒதுக்கீடே, தற்போது மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையும் சேவைகளின் பரப்பளவும் அதிகரித்துள்ள நிலையிலும் தொடர்வதால் கடுமையான ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தனர். குறிப்பாக, மகப்பேற்று விடுதியில் நிலவும் பணிச்சுமை மற்றும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் விரிவாகச் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புதிதாக நியமிக்கப்படவுள்ள உள்ளகப் பயிற்சி மருத்துவர்களின் ஒதுக்கீட்டில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உடனடியாக உள்ளக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது. அதேவேளை, மாகாணத்திலிருந்து தாதியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இவ்விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான தேவையையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு மீளாய்வு செய்யப்பட்ட ஆளணி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை உரிய தரப்புகளிடம் முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மருத்துவமனையின் கட்டடப் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. மருத்துவமனையின் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையான வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், சுகாதார அமைச்சின் கணக்காளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.