16 komaatha eng

ஒரு கிராமம் வளர்ச்சியடைவது அரசாங்கத்தின் முயற்சிகளில் மட்டுமல்ல, அந்தக் கிராம மக்களின் ஆர்வத்திலும், முன்முயற்சியிலும், தமது தேவைகளைத் தாமே அடையாளம் கண்டு அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதிலும்தான் தங்கியிருக்கிறது. இன்று கைதடி மக்கள் தமது கிராமத்தின் தேவையை உணர்ந்து, அதற்காக இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறாக இந்தக் கேணி உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தற்போது நிலவும் எல்நினோ காலநிலைச் சவாலால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியைக் கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ‘கைதடி கோமாதா குடிநீர்த் திட்டம் – 2026’ இன் கீழ் அமைக்கப்பட்ட புதிய கேணியைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றபோது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரப் பகுதியில், கைதடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில், ஆவுறிஞ்சிக்கல் அமைந்துள்ள நீரேந்து பகுதியில், உரிய அனுமதிகளுடன் இக்கேணி அமைக்கப்பட்டுள்ளது.

கைதடியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்பிலும், கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் பரிபாலன சபையின் ஆதரவிலும், ந.சஞ்சயன் அவர்களின் திட்ட வரைவுக்கமையவும், வடக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் அமைப்பான பசுந்தேசம் அமைப்பின் நேரடி நடைமுறைப்படுத்தலிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

எந்தவொரு கிராமத்துக்கும் அதன் தேவைகள் என்ன என்பதை அந்த மக்களைவிட நன்றாக யாரும் அறிந்திருக்க முடியாது. இன்று உங்கள் கிராமத்துக்குத் தேவையான ஒரு விடயத்தை நீங்கள் ஆர்வத்துடன் முன்வைத்து, அதற்காக ஒன்றிணைந்து முயற்சி செய்து அதனை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள். இது பாராட்டப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

இன்று பல இடங்களில் வீதிகளின் நுழைவாயில்களில் பிரமாண்டமான வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அதற்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகள் பெருமளவு நிதியை வழங்குகின்றனர். ஆனால், அந்த வளைவுக்கு அருகில் வாழும் ஏழைக் குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதே அளவு கவனம் செலுத்தப்படுவதில்லை.

ஆனால், கைதடியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம்பெயர் உறவுகள் தமது கிராமத்தின் உண்மையான தேவையைக் கண்டறிந்து, அந்தத் தேவையை நிறைவேற்றும் செயற்றிட்டத்துக்கு நிதியளித்து, அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்திருக்கின்றார்கள். இதுவே சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்பின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று பல இடங்களிலும் குளங்கள், கேணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட பாரம்பரிய நீர்நிலைகளைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாகி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக எதிர்கால காலநிலை அபாயங்களை கருத்திற்கொண்டு, கால்நடைகளின் குடிநீர்ப் பிரச்சினைக்கு முன்கூட்டியே தீர்வொன்றை உருவாக்கும் வகையில் இந்தக் கோமாதா குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மிகவும் பாராட்டுக்குரியது.

இங்கு வந்து பார்வையிட்டபோது, இந்தக் கேணிக்கு அருகிலுள்ள குளத்தையும் தூர்வாரி அதன் நீர்ப்பிடிப்புப் பரப்பை மேலும் அதிகரிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த ஆண்டு முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன்.

நீங்கள் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்குத் தீர்வு காண்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றீர்கள். இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய கிராமங்களும் தமது உள்ளூர் தேவைகளுக்கேற்ப இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. கைதடி மக்களின் இந்த சமூக அக்கறை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் குறுகிய காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் எதிர்கொள்ளப்படும் நிலை உருவாகலாம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதனை எதிர்கொள்ள இப்போதே நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘எமக்கு எதிர்காலத்தில் குறுகிய நாட்களில் அதிக மழைவீழ்ச்சியும், அதன் பின்னர் கடும் வறட்சியும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பெய்யும் மழைநீரை கடலுடன் கலக்க விடாமல், அதைச் சேமித்து வைப்பதன் ஊடாகவே எதிர்வரும் வறட்சியையும் நாம் தாங்கக்கூடியதாக இருக்கும். குளங்கள், கேணிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பதும், அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பதும் எதிர்கால நீர்ப்பாதுகாப்பின் முக்கிய அடித்தளமாக அமையும்’ எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் நிகழ்விடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து கேணி நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மரம் நடுகையும் நடைபெற்றது. நிகழ்வில், மாடுகளுக்கான தீவனமும் பண்ணையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆலய குருக்கள், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.