21 toddy export eng

கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (10.09.2026) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்றுமதிக்கான கள் உற்பத்தி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சங்கம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவனத்தால் வழங்கப்படும் தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் கள் உற்பத்தியை முன்னெடுத்து வரும் நிலையில், ஒப்பந்தத்தில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, தனியார் நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ஆகிய தரப்புகளுக்கிடையில் நிலவும் விடயங்களுக்கு உரிய இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்விதத் தெளிவின்மைக்கும் இடமளிக்காத வகையில் வெளிப்படையானதும் நிலையானதுமான பொறிமுறையொன்றின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து ஏற்றுமதிக்காக கள்ளைக் கொள்வனவு செய்வதும், அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப அறிவை வழங்குவதும் எதிர்காலத்தில் கேள்விகோரல் நடைமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படுவதற்கான தனியான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கூட்டுறவு உதவி ஆணையாளர் (தலைமைப்பீடம்), கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகள், காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ரப்பேர்ஸ் டியூ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.