கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், குறைந்த வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்கக்கூடிய வலுவான கூட்டுறவு அமைப்புகள் அவசியம். மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கு மாற்றாகவும், மக்களின் நலனை முன்னிறுத்தும் வலுவான நிறுவனங்களாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் 1926–2026 நூற்றாண்டு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மூளாய் சைவவித்தியாலய சிவமலர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத் துறையின் எதிர்காலப் பங்கு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளுநர் தனதுரையில், கூட்டுறவுத்துறை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு முக்கிய துறை எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் ஒரு காலப்பகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாக இயங்கி, கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்து, அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கு உதவியதுடன், மக்களின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் துணைநின்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், காலப்போக்கில் கூட்டுறவுத்துறையின் செயற்பாடுகள் பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இத்துறையை மீண்டும் வலுவான நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய நிறுவனங்களாக மாற்றமடைந்து, மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதாரமாகத் திகழ வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய குறைந்த வட்டி கடன் வசதிகளை வழங்குவதில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆளுநர் தெரிவித்தார்.
வங்கிகளில் கடன் பெறுவதற்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், சாட்சிகள் உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாக சில கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு மாறாக, கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக ஒப்பீட்டளவில் இலகுவாகவும் குறைந்த வட்டி விகிதத்திலும் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மக்களைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டும் வகையில் செயற்படுவதாகக் கூறப்படும் சில நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, உரிய அனுமதியின்றி இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் வலுவான மாற்று அமைப்புகளாக கூட்டுறவுச் சங்கங்கள் மேலும் திறன் பெற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இத்தகைய நிறுவனங்கள் வலுப்பெறும் போது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும் சுயதொழில் முயற்சிகளும் மேலும் ஊக்கமடையும் எனத் தெரிவித்தார்.
தொல்புரம் மூலாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது அதன் நீண்டகால மக்கள் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலத்தில் இச்சங்கம் வழங்கிய சேவைகள் தொடர்ந்தும் மக்களால் மதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகள் மற்றும் சிறுகடன் சேவைகள் கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நிறுவனம் நூற்றாண்டை கடந்தும் நிலைத்திருக்க அதன் தலைமைத்துவம், நிர்வாகப் பொறுப்பு மற்றும் உறுப்பினர்களுக்கான சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியமான காரணிகளாகும் எனத் தெரிவித்த ஆளுநர், சங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைமைத்துவங்களையும் நிர்வாகத்தினரையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் பலரும் பங்கேற்று சிறப்பித்ததுடன், நூற்றாண்டு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.





