நல்லைக்குமரன் மலர் போன்ற வெளியீடுகள் வெறுமனே அச்சுப் பிரதிகளாக வெளியிடப்பட்டு நூல் அலுமாரிகளில் நிற்பதுடன் முடிவடையக்கூடாது. இன்றைய இளைய தலைமுறையின் வாசிப்பு பழக்கமும் தகவல் பெற்றுக்கொள்ளும் முறையும் மாறிவரும் நிலையில், இத்தகைய அறிவுச் செல்வங்கள் அச்சு வடிவத்துடன் டிஜிட்டல் வடிவங்களிலும் அவர்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஒரு வருடாந்த வெளியீடு தலைமுறைகளை இணைக்கும் தொடர்ச்சியான பண்பாட்டு இயக்கமாக மாறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நல்லைக்குமரன் மலர் – 34 வெளியீட்டு விழா இன்று (19.08.2026) புதன்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலை மண்டபத்தில் நடைபெற்றது. சைவசமய விவகாரக் குழுவின் தலைவரும் யாழ்ப்பாண மாநகர ஆணையாளருமான டி.கே.அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், நல்லூர் கந்தசுவாமி பெருந்திருவிழாக் காலம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம்பெயர் உறவுகளையும், பக்தர்களையும், அறிஞர்களையும், கலைஞர்களையும் யாழ்ப்பாணத்தை நோக்கி மீண்டும் அழைத்துவரும் முக்கிய பண்பாட்டு சந்தர்ப்பமாக அமைவதாகக் குறிப்பிட்டார். அந்தப் பின்னணியில் ‘நல்லைக்குமரன் மலர்’ தனது 34ஆவது வெளியீட்டை எட்டியிருப்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல, நல்லூர் கந்தசுவாமியின் மகோற்சவத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் பண்பாட்டு–அறிவுப் பயணத்தின் தொடர்ச்சிக்கான சான்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நூல்களின் எண்ணிக்கை குறையவில்லை, அறிவின் அளவும் குறையவில்லை. ஆனால் நீண்ட கட்டுரைகளையும் விரிவான எழுத்துக்களையும் வாசித்து புரிந்துகொள்ளும் பொறுமை இளைய தலைமுறையிடம் குறைந்து வருவது மறுக்க முடியாத மாற்றமாகும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஒரு செய்தியை வாசிப்பதற்குப் பதிலாக ஒரு காணொலியைப் பார்ப்பதும், நீண்ட கட்டுரைக்கு பதிலாக சில விநாடிகளில் தகவலைப் பெறுவதும் இன்றைய தலைமுறையின் புதிய பழக்கங்களாகிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றத்தை குற்றமாகக் கருதாமல், அதற்கேற்ப அறிவை எடுத்துச் செல்லும் முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கமைய, நல்லைக்குமரன் மலர் அச்சுப் பதிப்பில் தொடர்வதுடன், சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள், மின்னூல்கள், காணொளி மற்றும் ஒலிவடிவங்கள் உள்ளிட்ட நவீன தொடர்பாடல் வழிகளிலும் இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ‘நூல் அலுமாரியில் மட்டும் இருந்தால் அது ஒரு ஆவணம்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அது ஒரு இயக்கம்’ என்ற சிந்தனையை முன்வைத்த அவர், நல்லைக்குமரன் மலரின் அறிவுப் பயணம் யாழ்ப்பாணத்தின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகளில் காணப்படும் நேரம் தவறாமையும் ஒழுங்கும் சமூக வாழ்வுக்கு ஒரு சிறந்த பாடமாகும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், நேரத்தை மதிப்பது வாழ்க்கையை மதிப்பதாகும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கை, நிர்வாகம், கல்வி, தொழில் மற்றும் சமூகப் பணிகள் அனைத்திலும் நேர ஒழுங்கு அவசியமான பண்பாகும் என்றும் தெரிவித்தார். நல்லூர் பெருந்திருவிழாவின் நூற்றாண்டுகால ஒழுங்கிலிருந்து இப்பாடத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ் மொழி, தமிழியல், மொழியியல் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறைகளில் நீண்டகால அறிவுப் பங்களிப்பை வழங்கிய தகைசால் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் ஆய்வுத் துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் பங்களிப்பை தமிழ் அறிவுக்கும், கல்விக்கும், ஆய்வுக்கும், எமது பண்பாட்டு மரபுக்கும் வழங்கப்பட்ட கௌரவமாக ஆளுநர் வரவேற்றார்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் வேர்களின் ஆழத்திலிருந்தே உருவாக வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், உலகத்துடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய இளைய தலைமுறை நவீன அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ள வேண்டிய அதேவேளை, ‘நாம் யார்? எமது வேர்கள் எங்கே? எமது மரபு என்ன?’ என்பதையும் அறிந்திருக்க வேண்டும் என்றார். நல்லைக்குமரன் மலர் இவ்விரு தேவைகளையும் இணைக்கும் ஒரு முக்கிய பண்பாட்டு ஆவணமாகத் தொடர்ந்து விளங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லைக்குமரன் மலர் இனியும் தொலைதூரம் பயணிக்க வேண்டும்; உலகின் எந்த மூலையிலும் வாழும் யாழ்ப்பாண மக்களின் வீடுகளையும், கல்வி நிறுவனங்களையும், நூலகங்களையும், இளைய தலைமுறையினரின் கைகளையும் சென்றடைய வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார். அச்சுப் பதிப்புடன் நவீன ஊடகங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி அதன் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு இடம்பெற்றதுடன், மலர் வெளியீட்டு உரை, ஆய்வுரை, சிறப்பு விருந்தினர் உரை, யாழ் விருது வழங்கல் மற்றும் ஏற்புரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சைவசமய விவகாரக் குழுவின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர சபை பிரதிநிதிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள், சமயப் பேராளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



