வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையிடம் ஆளுநரால் நேரடியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இத்திட்டத்தின் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 15 வீடுகள் என மொத்தம் 30 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பயனாளிகளாக காணியற்றதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களிலிருந்தும் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் வீடமைப்புத் தேவையுடன் வாழும் குடும்பங்களுக்கு, புலம்பெயர் சமூகத்தின் மனிதநேயப் பங்களிப்பின் ஊடாக நிலையான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இத்திட்டத்தை உரிய காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஏற்பாடுகள், நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், கோப்பாய் பிரதேச செயலாளர், லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையின் நிறுவுனர் பரமநாதன் மற்றும் வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



