29 2027 dev eng

வடக்கு மாகாணத்தில் 2027ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் உண்மையான தேவைகளையும் களப் பயணங்களின் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபையால் 2027ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (26.11.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மக்களிடமிருந்து அவர்களின் தேவைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் ஏற்கெனவே கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று, தாம் பின்தங்கிய கிராமங்களுக்கு மேற்கொண்ட களப் பயணங்களின் போதும் பல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் உள்வாங்குவதை அமைச்சுச் செயலாளர்களும் திணைக்களத் தலைவர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

அதேவேளை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கேள்விகோரல் அறிவித்தல்களை 2027 ஜனவரி மாதத்திலேயே வெளியிடக்கூடிய வகையில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். நிரல் அமைச்சுக்களால் ஆண்டின் இறுதிக் காலாண்டில் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை ஆண்டின் தொடக்கத்திலேயே வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இம்மாற்றம் நடைமுறைக்கு வந்தால் அடுத்த ஆண்டுத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சவால்களைக் குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சு மற்றும் திணைக்களத்தாலும் 2027ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட திட்டங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன.
விவசாயத் திணைக்களத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் ஒன்றைத் தெரிவுசெய்து, அக்கிராமத்தின் மண்ணின் தன்மை மற்றும் சூழலுக்குப் பொருத்தமான பயிர்ச்செய்கையை ஊக்குவித்து, விளைச்சலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், விவசாய ஆசிரியர்கள் பணியாற்றும் பாடசாலைகளில் பாடசாலைத் தோட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் களப்பணிகளை இலகுபடுத்தும் நோக்கில், மானிய அடிப்படையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சால் 2027ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 96 புதிய வீடுகளை அமைப்பதற்கும், மேலும் 50 வீடுகளைப் புனரமைப்பதற்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.கல்வித் திணைக்களத்தால் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தப்படாமல் உள்ள பாடசாலைக் கட்டடங்களை நிறைவு செய்வதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடலின்போது, சமர்ப்பிக்கப்பட்ட சில திட்டங்களை அவற்றின் தேவை, பயனாளிகள் மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீளாய்வு செய்து, தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். மக்களின் தேவைகளை நேரடியாகச் சென்றறிந்து, கிடைக்கப்பெறும் நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, திட்டமிட்ட காலத்துக்குள் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றுவதற்கான தயார்நிலையுடன் அனைத்துத் திணைக்களங்களும் செயற்பட வேண்டும் என்பதையும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த முன்மொழிவுகள் நிதி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.