27 sports eng

மாணவர்கள் தங்களது கல்விக்கு மேலதிகமாக கலை மற்றும் விளையாட்டுக்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான மேலதிக செயற்பாடுகளில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதன் ஊடாகவே, தங்களின் தலைமைத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (17.04.2026) வெள்ளிக்கிழமை அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்:

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிகழ்வை நடத்துவதா இல்லையா என்ற ஒரு குழப்பமான சூழல் நிலவி வந்தது. மிகச் சில தினங்களுக்கு முன்னர்தான் இதனை நடத்துவதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த நிகழ்வை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஒழுங்கமைத்து அரங்கேற்றியமைக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தச் சித்திரைப் புத்தாண்டு என்பது தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இருவருக்கும் பொதுவானது. இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரே பண்டிகையாகவும் இது விளங்குகின்றது. இவ்வாறான கொண்டாட்டங்கள் ஊடாக ஒருவரது கலாசாரம் மற்றும் பண்பாடுகளை மற்றவர் அறிந்துகொள்வதற்கும், புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும். இன்றைய தினம் கலை நிகழ்வுகளைச் செய்த மாணவர்கள் தங்களது ஆற்றல்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

உண்மையில், இன்றைய இந்தக் கொண்டாட்டம் என்பது வெறும் கொண்டாட்டமாக மாத்திரமன்றி எமது பாரம்பரிய கலாசார பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவு வகைகளை எமது கண்முன்னே மீளக்கொண்டு வந்திருக்கின்றது, என்று தெரிவித்தார்.

முன்னதாக, விழா மைதானத்துக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி கௌரவமாக வரவேற்று அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மற்றும் சிங்களப் பாரம்பரியக் குடில்களைக் கௌரவ ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பார்வையிட்டனர். மைதானத்தில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சிக்கூடங்களையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் மேடை நிகழ்வுகளாக, வரவேற்பு நடனம், பேடிக்கூத்து, கண்டிய நடனம், கண்ணன் நடனம், பாரம்பரிய சிங்கள நடனம், புத்தாக்க நடனம், பாம்பு நடனம், தில்லானா நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.

அதேநேரம், பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் (கிறீஸ் மரம்) ஏறுதல், தலையணைச் சண்டை உள்ளிட்ட பல கிராமிய விளையாட்டுப் போட்டிகளும் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்களித் தலைவரும் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சருமான கௌரவ உபாலி சமரசிங்க, கரவெட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலர்கள், பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர், விளையாட்டுத்துறை பணிப்பாளர், கரவெட்டி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், சபைச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.