25 coop certificate eng

வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்கு, கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் புதிய சிந்தனையும் மனமாற்றமும் ஏற்பட வேண்டும். அலுவலக மட்டத்திலிருந்து செயற்படுவதைக் கடந்து, களத்துக்குச் சென்று சங்கங்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அவற்றை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நவீன முகாமைத்துவத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் செல்வி செ.அகல்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மாவட்ட கூட்டுறவுச் சபைகளால், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடனும் மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தின் பங்களிப்புடனும் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கு, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபைகளால் நடத்தப்பட்ட கூட்டுறவு முகாமைத்துவ உயர்தரச் சான்றிதழ் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 32 பணியாளர்களுக்கும், மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட பணியாளர்களுக்கான திறன்விருத்திப் பயிற்சிகளில் பங்கேற்ற 215 பணியாளர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஒரு காலத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை மக்கள் வாழ்க்கையோடும் உற்பத்தியோடும் நெருக்கமாக இணைந்து வலுவாகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முகாமைத்துவப் பலவீனங்கள் உள்ளிட்ட காரணங்களால் அதன் வலிமை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தாம் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டிருந்தபோதிலும், சில நிர்வாகங்களின் முறைகேடுகள் மற்றும் பலவீனங்களால் அவை எதிர்பார்த்த பலனை வழங்கத் தவறியதால், ஒரு கட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மீதான தமது நம்பிக்கையே பாதிக்கப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இந்நிலையை மாற்றுவதற்குத் திறமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறல் மிக்க முகாமைத்துவம் உருவாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டுறவுத்துறையின் எதிர்காலம் நவீன முகாமைத்துவம், வெளிப்படையான கணக்கியல், மின்னணு நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறன், புதிய தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் உறுப்பினர்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில் உற்பத்திகள், பெண்களின் சிறுதொழில்கள் மற்றும் இளைஞர்களின் புதிய முயற்சிகள் போன்ற பல்வேறு பொருளாதார வளங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வரை ஒருங்கிணைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், இன்று சான்றிதழ்களைப் பெறும் பணியாளர்கள் தாம் கற்ற அறிவையும் திறன்களையும் பணியிடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சான்றிதழ் என்பது அலுவலகச் சுவரில் காட்சிப்படுத்துவதற்கான ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

கூட்டுறவுச் சங்கங்கள் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் நிறுவனங்களாக உருவாக வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும், நுகர்வோரைப் பாதுகாக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் புதிய கூட்டுறவுப் பயணத்தை அனைவரும் இணைந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திருமதி எ.அன்ரன் யோகநாயகம், உதவிப் பிரதம செயலாளர் திருமதி. அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ், வவுனியா பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் யோ.நந்தகோபன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள், மாவட்ட கூட்டுறவுச் சபை பிரதிநிதிகள் மற்றும் சான்றிதழ் பெற்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.