18 nallur edu music eng

இசையின் ஊடாக மனதுக்கு அமைதியையும் ஆன்மிக உணர்வையும் வழங்கும் ‘தெய்வீக சுகானுபவம் – 12’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக சுகானுபவம் – 12’ இசை நிகழ்வு, நேற்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை இரவு கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, இசை மற்றும் கலை நிகழ்வுகளின் ஊடாக ஆன்மிக உணர்வையும் இசை நயத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இடம்பெற்றதுடன், பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தால் தமிழ்த்தாய் வாழ்த்து, நல்லூர் நர்த்தன ஷேத்ரா மாணவிகளின் வரவேற்பு நடனம், தலைமையுரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறை மாணவிகளின் நடன நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரை, புல்லாங்குழல் இசை மற்றும் கலைஞர்களின் இசை வழங்குகைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வுக்கு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமை தாங்கியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரபல புல்லாங்குழல் கலைஞர் அதுல் குமார் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்வும், புகழ்பெற்ற பாடகியும் கலைமாமணி விருது பெற்றவருமான சாரதா ராகவ் அவர்களின் குரலிசை நிகழ்வும் இடம்பெற்றன. இவர்களின் இசை வழங்குகைகள் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு இனிய இசை அனுபவத்தை வழங்கின.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘தெய்வீக சுகானுபவம்’ நிகழ்வு பன்னிரண்டாவது ஆண்டை எட்டியிருப்பது, யாழ்ப்பாணத்தின் இசை மற்றும் பண்பாட்டு வாழ்வில் இந்நிகழ்வுக்கு உருவாகியுள்ள தனித்துவமான இடத்தையும், அதற்குக் கிடைத்துவரும் தொடர்ச்சியான வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது.

நல்லூர் பெருந்திருவிழாவின் ஆன்மிகச் சூழலுடன் இசையையும் கலையையும் இணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, வடக்கு மாகாணத்தின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியையும், இந்தியா – இலங்கை கலை மற்றும் பண்பாட்டு உறவுகளின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.