யாழ் மாவட்டத்தில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் நாற்று நடுகைக்கான வயல் விழா நிகழ்வு
மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குரக்கன் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குரக்கன் நாற்று நடுகை செய்யும் நிகழ்வு மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டத்தின் கீழ் மிளகாய் விதைகள் வழங்கும் நிகழ்வு ஆகியவை யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிலுள்ள தொட்டிலடி கிராமத்தில்; தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிறோஐன் அவர்களின் தலைமையில் 11.05.2020 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் இடர்ப்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில் கடந்த மாதம் (15.04.2020) நடமாடும் சேவை மூலம் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தால் தொட்டிலடிப் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு அவுஷத குரக்கன் இனம் மற்றும் உள்ளூர் குரக்கன் இனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அவ் விதைகளைப் பயன்படுத்தி விவசாயிகளினால் நாற்றுமேடை தயாரிக்கப்பட்டு இன்று (11.05.2020) முதற் கட்டமாக நாற்று நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பிற்கான பாடவிதான உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் திரு.ச.பாலகிருஸ்ணன், பாடவிதான உத்தியோகத்தர், மறுவயற் பயிர்கள், திரு.ஆ.கோபிராஐ் மற்றும் விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிறோஐன் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று தனது உரையினை ஆரம்பித்தார். சங்கானைப் பகுதியில் தொட்டிலடி பிரதேசம் அதிகளவில் மேட்டுநிலங்களைக் கொண்டதுடன் இங்கு நீர் வடிந்தோடும் மண் அமைப்பும் நீர் வசதியும் காணப்படுகின்றமையினால் வைகாசி தொடக்கம் ஆடி வரை குரக்கன் செய்கைக்கு மிகவும் பொருத்தமான காலமாகும் எனவும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் குறைந்த விதை வளத்தினைக் கொண்டு ஓர் அலகில் அதிகளவான தானியத்தினை உற்பத்தி செய்வது அத்தியாவசியமானது. அந்த வகையில் குரக்கன் நாற்று நடுவதன் மூலம் விதைத் தேவை அரைவாசியாக குறைவடைவதுடன் ஓர் அலகுக்கான விளைச்சலையும் அதிகரிக்கலாம் வீசி விதைப்பதை விட 3 மடங்கு அதிக விளைச்சலினை நாற்று நடுகை மூலம் பெறலாம் எனவும் 14 – 21 நாட்கள் நாற்று மேடையில் இருப்பதனால் ஏக்கருக்கான நீர்த்தேவை குறைவு எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஒருங்கிணைந்த முறையில் பயிர்பாதுகாய்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் சேதன பசளைகளான மீன் அமிலக் கரைசல், சீமைக்கிளுவைக் கரைசல் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட மாட்டுச்சலம் போன்றவற்றினையும் பயன்படுத்தலாம் எனவும் கூறினார்.
யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் அவர்கள் தனது உரையில் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியில் தன்னிறைவடைவடைவதனை இலக்காகக் கொண்டு அரசினால் சோளம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக் கிழங்கு, கௌபி, பயறு, உழுந்து, நிலக்கடலை, எள்ளு, கொள்ளு, மஞ்சள், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகாய், குரக்கன், சோயா போன்ற 16 வகையான பயிர் வகைகளுக்கு விதை மானியம் வழங்கப்படுகின்றது எனக் கூறினார். எனவே அதனடிப்படையில் அதற்குரிய விண்ணப்பங்களை மே மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விவசாயப் போதனாசிரியரிடம் வழங்;குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் கூடியளவான நார்ப் பொருட்கள் மற்றும் பொட்டாசியம், கல்சியம் போன்ற கனியுப்புக்கள் அதிகளவாகச் செறிந்து காணப்படும் தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் எனக் கூறினார். எமது நாட்டில் செத்தல் மிளகாய் உற்பத்தி பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்தே அதிகளவான செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனவே செத்தல் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது. நம் நாடு செத்தல் மிளகாய் உற்பத்தியில் தன்னிறைவு அடைய விவசாயிகளின் முயற்சி மிகவும் காத்திரமானதாக அமைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
வடமாகாண விவசாய பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் தனது உரையில் 9500 மெற்றிக் தொன் குரக்கன் எமது நாட்டில் ஆண்டு தோறும் நுகரப்படுவதாகவும் இதில் 4000 மெற்றிக் தொன் அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறினார். எனவே இவ் இறக்குமதி செலவினை குறைப்பதற்கேதுவாக நாம் குரக்கன் உற்பத்தியில் ஈடுபடுவதுடன் செத்தல் மிளகாய் உற்பத்தியிலும் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் ஒருங்கிணைந்த முறையில் பயிர்பாதுகாய்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் சேதன பசளைகளான மீன் அமிலக் கரைசல், சீமைக்கிளுவைக் கரைசல் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட மாட்டுச்சலம் போன்றவற்றினையும் பயன்படுத்தலாம் எனவும் கூறினார். மேலும்; எமது நுகர்விற்குத் தேவையான இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றிற்கும் எமது நாடு இறக்குமதியையே நம்பியுள்ளது. இவற்றினை உற்பத்தி செய்யவும் விவசாயிகள் ஆர்வமுடன் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயிர் பாதுகாப்பிற்கான பாடவிதான உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் திரு.ச.பாலகிருஸ்ணன் அவர்கள் செத்தல் மிளகாய் உற்பத்திக்கு KA2, MI2 போன்ற காரம் கூடிய இனங்கள் பொருத்தமானவை எனக் கூறினார். அத்துடன் தொடர்ச்சியாக வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் விளைநிலங்களில் பயிர்ச்சுழற்சியாக குரக்கன்; செய்கையினை மேற்கொள்வது சிறப்பாக அமையும். ஏனெனில் தானியங்களின் வேர்ப்பகுதி மண்ணில் காணப்படும் பயிர்ச்செய்கைக்குப் பாதகமான பங்கசுகளிற்கு ஒவ்வாத சூழலை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது. இதனால் வெங்காயச் செய்கையில் அந்திரக்னோஸ் மற்றும் குமிழலுகல் போன்ற பங்கசு நோய்களினை உருவாக்கும் நுண்ணங்கிகளில் இருந்து வெங்காயப் பயிரினைப் பாதுகாக்கலாம். தற்பொழுது கொரோனா நோய்த் தாக்கத்தினால் நாட்டில் நிலவும் வறுமையினைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஊக்கத்துடன் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளின் நலனையும் நேரத்தினையும் கருத்திற் கொண்டு இது தொடர்பான வயற்பாடசாலை ஒன்றினை மாதத்தில் 2 நாட்கள் நடாத்தவுள்ளதாகத் தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிறோஐன் அவர்கள் தெரிவித்தார்.
இப் பிரதேசத்தில் 12 ஏக்கர் விஸ்தீரணத்தில் குரக்கன் பயிர்ச் செய்வதற்குரிய நாற்று நடுகை 10 விவசாயிகளினால் 11.05.2020 ஆம் திகதி இடம் பெற்றது. அத்துடன் மிளகாய் செய்கையை ஊக்குவிப்பதற்காக 20 பயனாளிகளிற்கு 200 கிராம் மிளகாய் விதைகள் அரை ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கை பண்ண வழங்கி வைக்கப்பட்டது.
பாடவிதான உத்தியோகத்தர்களால், தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கான பயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டது.