28 කිලිනොච්චිය, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්‍රික්කවල නව කාර්මික ජනපද

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்டச் செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தபோது, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஆளுநர் எடுத்துரைத்தார். அதற்கமைய, குறித்த மாவட்டங்களில் பொருத்தமான காணிகளை அடையாளம் காணும் செயன்முறை மாவட்டச் செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, அச்சுவேலி மற்றும் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழிற்பேட்டைகளை மேலும் வலுப்படுத்துதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகே விளக்கமளித்தார்.

மேலும், முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்தல், தொடர்புடைய தரப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், கடன் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் கைத்தொழிற்பேட்டையின் இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.