12 eng health dev

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது.

மாகாணத்திலுள்ள ஆதார மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், சத்திரசிகிச்சைக் கூடங்களை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நோயாளர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் உட்கட்டமைப்புத் திருத்த வேலைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை (130 மில்லியன் ரூபா), பருத்தித்துறை (58.5 மில்லியன் ரூபா), சாவகச்சேரி (50 மில்லியன் ரூபா) மற்றும் ஊர்காவற்றுறை (43.5 மில்லியன் ரூபா) ஆகிய ஆதார மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வேலைத்திட்டங்களுக்கான கேள்விப்பத்திரங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி (17 மில்லியன் ரூபா), மாங்குளம் (20.5 மில்லியன் ரூபா) மற்றும் புதுக்குடியிருப்பு (35 மில்லியன் ரூபா) மருத்துவமனைகளுக்குச் சத்திரசிகிச்சைக் கூடங்கள், கண் மருத்துவக் கிளினிக்குகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு 36.5 மில்லியன் ரூபாவும், வவுனியா செட்டிக்குளம் ஆதார மருத்துவமனைக்கு 54.3 மில்லியன் ரூபாவும், மன்னார் முருங்கன் ஆதார மருத்துவமனைக்கு 36.73 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உலக வங்கியின் நிதியுதவியுடனான ஆரம்ப சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 14 பொதிகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் 5 பொதிகளுக்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. எஞ்சிய திட்டங்களுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்து இரு வாரங்களுக்குள் திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வடக்கு மாகாணத்தின் ஏனைய திணைக்களங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும், இத்திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப ஆளணிகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டை இதே திட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை உடனடியாக முன்வைக்குமாறும் ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கான கேள்விப்பத்திரங்களைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை மிக விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு நிதியுதவியுடனான திட்டங்களை உரிய காலவரையறைக்குள் விரைந்து நிறைவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு வினைத்திறனாகச் செயற்படுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் மாகாணத்தின் அபிவிருத்திக்காக மேலும் பல நிதியுதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல், பொறியியல்), வடக்கு மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், சுகாதாரத் திணைக்களத்தின் பதில் மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.