19 long bus eng

100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டு அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்ட புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் நெடுந்தூரப் பேருந்துகள் சேவைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்காத நிலையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். பேருந்து நிலையங்களின் செயற்பாடுகளும் பேருந்துச் சேவைகளும் பயணிகளின் நலனை மையப்படுத்தியே அமைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்விடயம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர், சபையின் நடைமுறைகளின்படி 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரமே நெடுந்தூரப் பேருந்துச் சேவையாகக் கருதப்படுவதாகத் தெளிவுபடுத்தினார். புதிய பேருந்து நிலையம் இந்தத் தூர வரையறையின் அடிப்படையிலா அல்லது வெளிமாவட்டங்களுக்கான பேருந்துச் சேவைகளைக் கருத்திற்கொண்டா அமைக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, குறித்த பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து, 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளும் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் எனத் தலைவர் பணிப்புரை விடுத்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் சாலைகளின் முகாமையாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு இணக்கம் தெரிவித்தனர். 100 கிலோமீற்றருக்குக் குறைவான உள்ளூர் சேவைகள் தற்போதைய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இணைந்த நேர அட்டவணையில் மாற்றம்

இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ஏற்படும் நேர மோதல்கள் மற்றும் பயணிகளுக்கான சிரமங்களைத் தவிர்ப்பதற்காக நேர அட்டவணையை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் இந்த இணைந்த நேர அட்டவணைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளையும் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக இந்த விகிதாசாரக் கட்டமைப்புக்குள் உள்ளடக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.

இணைந்த நேர அட்டவணையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதனை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் இறுதிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு அறிவித்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் இணைந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

முற்பதிவு வசதிகளும் பயணிகள் பாதுகாப்பும்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகளில் இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முற்பதிவு செய்த பயணிகள், தற்போது பயன்படுத்தப்படும் பேருந்து நிலையத்திலிருந்து ஏறி, பின்னர் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்தை நோக்கிப் பயணிப்பது தொடர்பில் சாலைகளின் முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரச் சேவைகளுக்கான பயணிகள் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே ஏற வேண்டும் எனத் தெளிவுபடுத்தினார். இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முற்பதிவு செய்யும் பயணிகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முற்பதிவு மற்றும் பயணச் சேவை தொடர்பான பணிகளை இலகுவாக்கும் வகையில், புதிய பேருந்து நிலையத்தின் தளத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் தனியார் பேருந்துச் சங்கத்தினருக்கும் தனித்தனியான அலுவலக அறைகளை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அங்கிருந்தே முற்பதிவு உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்க முடியும் எனத் தலைவர் தெரிவித்தார். மேலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அனைத்துப் பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பேருந்து நிலையத்துக்கு சேவைகள் மாற்றப்படும் ஆரம்பக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக, பொலிஸ் விசேட குழுவொன்றை ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனுமதியற்ற பேருந்துச் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

‘Staff Service’ என்ற பெயரில் இயங்கும் சில பேருந்துகள் உரிய வழித்தட அனுமதியின்றி செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இத்தகைய சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அரச அல்லது தனியார் நிறுவனத்தின் உத்தியோகபூர்வச் சான்று, நிறுவனத் தலைவரின் கையொப்பத்துடனான உறுதிப்படுத்தல், பயணிக்கும் அலுவலர்களின் விவரங்கள் மற்றும் ஆசன எண்ணிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். இவ்விடயத்தில் உரிய ஒழுங்குகளை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சில தனியார் பேருந்துகள் யாழ்ப்பாண நகரப் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றுவது தொடர்பிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. குறித்த பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்களைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட சேவைகளுக்கான பேருந்துகள் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற பொதுவான நடைமுறையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

பொது மலசலகூடப் பராமரிப்பு தொடர்பிலும் தீர்மானம்

தற்போதைய மத்திய பேருந்து நிலையத்தின் காணி அரச காணியாக இருந்தபோதிலும், அது இதுவரை உரிய முறையில் பாரப்படுத்தப்படவில்லை என்ற விடயம் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாண மாநகர சபையால் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தைப் பராமரித்து இயக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மலசலகூடப் பராமரிப்பு ஒப்பந்தம் 2026 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, 2027 ஜனவரி முதல் அரச நிறுவனத்திலிருந்து மற்றொரு அரச நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கும் நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைக்க முடியுமா என்பது ஆராயப்பட்டது. தேசிய பெறுகை வழிகாட்டல்களுக்கு அமைவாக இத்தகைய ஏற்பாடு சாத்தியமா என்பதை மாநகர சபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆராய்ந்து, விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தனியார் ஒப்பந்த முறையில் மலசலகூடப் பராமரிப்பை ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளையும் கருத்திற்கொண்டு, இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைக்கும் சாத்தியத்தைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு அச்சபையின் தலைவர் மாநகர சபை கௌரவ மேயரிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் மாநகர சபையுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக மேயர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி, யாழ்ப்பாணப் பெருந்திட்டத்தின் கீழ் தற்போதைய மத்திய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் பல்வகைப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அது தொடர்பான நீண்டகாலத் திட்டம் ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் முடிவில், நெடுந்தூரப் பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளைச் சீரமைப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களை உரிய கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. புதிய நிலையத்துக்கு சேவைகள் மாற்றப்படும் காலப்பகுதியில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், பயணிகளுக்கான வசதிகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் ஆளுநர் தலைமையில் காலத்துக்குக் காலம் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்களை நடத்தவும் இணக்கம் காணப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர், யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் பருத்தித்துறை சாலைகளின் முகாமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.