11 vaddu hindu eng

ஒரு பாடசாலையின் பெருமையை அதன் கட்டடங்களைப் பார்த்து மட்டும் தீர்மானிக்க முடியாது. அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறியவர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே அதன் உண்மையான பெருமை வெளிப்படுகிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், தேசிய மட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களையும் சிறப்பாகக் கௌரவித்தார்.

வட்டு இந்துக் கல்லூரி நீண்டகால கல்விப் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் கொண்ட ஒரு பாடசாலை எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதன் பெருமை வெறுமனே அதன் வரலாற்றிலோ கட்டடங்களிலோ இருப்பதில்லை எனத் தெரிவித்தார். அப்பாடசாலையில் கல்வி கற்று பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலைகளை அடைந்த முன்னாள் மாணவர்களும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்புகளுமே அப்பாடசாலையின் உண்மையான அடையாளமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமது செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பார்த்தீபன் உள்ளிட்ட பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக இருப்பதையும் ஆளுநர் நினைவுகூர்ந்தார். பல்வேறு அரச சேவைகளில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் முன்னாள் மாணவர்கள், தாம் கல்வி கற்ற பாடசாலையின் கல்வி, பண்பாடு, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிக்கு சாட்சியமாகத் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் தாம் அமைந்துள்ள சமூகத்திலிருந்து தனிமைப்படாமல், அந்தப் பிரதேசத்தின் அறிவு, பொருளாதாரம், தொழில், ஆய்வு மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், வவுனியா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா போன்ற முன்னாள் மாணவர்களின் சமூக நோக்குடைய செயற்பாடுகள் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் கிராமப்புறப் பாடசாலைகள் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் எடுத்துரைத்தார். நகரப் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகி வருவதாகவும், இதனால் நகரப் பாடசாலைகளில் நெருக்கடியும் கிராமப் பாடசாலைகளில் பலவீனமும் உருவாகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கிராமத்திலும் தரமான பாடசாலைகளை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாகும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், வட்டு இந்துக் கல்லூரி போன்ற கிராமப்புறப் பாடசாலைகளும் கல்வி, விளையாட்டு, விவாதம், சுற்றுச்சூழல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தின் தொலைதூரப் பகுதிகளில் ஆசிரியர் மனிதவளப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய நிலை தொடர்வதாகவும் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்கால ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பிரதேச அடிப்படையிலான மனிதவளச் சமநிலையை உருவாக்குவது அவசியம் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு பிரதேசத்திலும் கல்வி கற்கும் மாணவர்களே எதிர்காலத்தில் அந்தப் பிரதேசத்தின் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நிர்வாகிகளாகத் திரும்பி வந்து சேவையாற்றும் நிலை உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் நேரடியாக மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி அவர்களைப் பாராட்டினார். தேசிய மட்ட விவாதப் போட்டி, அறிவிப்பாளர் போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், சாரணர் தேசிய ஜனாதிபதி விருது, இளம் விவசாய விஞ்ஞானிகள் போட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் தேசிய மட்டச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளமை நிகழ்வில் எடுத்துக்காட்டப்பட்டது.

இன்றைய தினம் ஆசிரியர் தினமாக அமைந்துள்ள நிலையில், ஆளுநர் தமது உரையில் ‘எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு ஒப்பானவன்’ என்ற உயரிய கருத்தை நினைவுகூர்ந்து, தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

மாணவர்கள் உயர்ந்து செல்ல வேண்டும்;. அதேவேளை தங்களை உருவாக்கிய பாடசாலையையும் மண்ணையும் மறந்து விடக்கூடாது என வலியுறுத்திய ஆளுநர், ‘உங்கள் வெற்றி உங்கள் குடும்பத்தின் வெற்றியாக இருக்கட்டும்; உங்கள் சேவை இந்தப் பாடசாலையின் பெருமையாக இருக்கட்டும்; உங்கள் தலைமைத்துவம் இந்த மண்ணின் எதிர்காலமாக இருக்கட்டும்’ என மாணவர்களிடம் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி யமுனா ராஜசீலன், வலிகாமம் வலயக் கல்வி அலுவலகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.சிவசிவா, யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.பார்த்தீபன், பாடசாலையின் பழைய மாணவனும் வீணாகான குருபீடத்தின் குருமுதல்வருமான சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சரஸ்வதி பூஜை, மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல், வரவேற்பு நடனம், சிறப்புரைகள் மற்றும் பல கட்டங்களாகப் பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.