மன்னார் மாவட்டம் நெற்செய்கையில் அதிக விளைச்சலை பெற்றுகொள்ளும் ஓரு மாவட்டமாகும் அதனால்தான் அதற்கு அரிசி கிண்ணம் (Rice bowl) என்னும் பெயரும் உண்டு. அதற்கிணங்க நெற்செய்கைக்கு பொருத்தமான களி மண் வகைகளில் ஒன்றான குருமசோல் (Grumusols) மண்வகை காணப்படுகின்றது. இம் மண்ணானது வடமாகாணத்தில் முருங்கன் துணுக்காய் போன்ற சில பகுதிகளிலேயே காணப்படுகின்றது.
குருமசோல் மண்ணானது அதிக களிதன்மையுடையதாக இருப்பதால் நீரை பிடித்துவைத்திருக்கும் தன்மை அதிகம் அத்துடன் நீர் வடியும் தன்மை குறைவு. எனவே விவசாயிகள் காலபோகத்தில் கிடைக்கும் மழை நீரைக் கொண்டு வருடத்தில் ஒரு தடவை மட்டுமே தமது வயல் நிலங்களில் நெற்செய்கையை மேற்கொண்டு வந்தனர். ஏனைய காலங்களில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகக் காணப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள குளங்களில் மிகப்பெரிய குளமாக கட்டுகரை குளம் திகழ்கின்றது. இக்குளத்தின் கீழ் காலபோகத்தில் 30,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அண்ணளவாக 11,000 விவசாயிகளுக்கு ஜீவனோபாயமாக இக் குளம் உள்ளது ஆனால் சிறுபோகத்தில் 3,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்குரிய நீரை மட்டும் தேக்கமுடிகின்றது அதன் மூலம் அண்ணளவாக 2500 விவசாயிகளே பயன்பெறுகின்றனர். ஏனைய 8500 விவசாயிகள் சிறுபோகத்தில் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகின்றது.
ஒரு ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு 7-10 ஏக்கர் அடி நீர் தேவை அதே வேளை பயறு, உழுந்து செய்கை மேற்கொள்வதற்கு 1.5 ஏக்கர், அடி.1.8 ஏக்கர் அடி நீர் முறையே தேவை. எனவே ஒரு ஏக்கரில் நெல்செய்வதற்கு பதிலாக 5 ஏக்கரில் சிறுதானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளலாம் இதன் மூலம் கட்டுக்கரை குளத்தை ஜீவனோபயமாக கொண்ட அனேக விவசாயிகளை பயிச்செய்கையில் ஈடுபடுத்த வாய்ப்பு ஏற்படும். இதனை இலக்காக கொண்டு கடந்த காலங்களில் மாகாண விவசாயத்திணைக்களம் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிவகுப்புக்கள், வயல்விழாக்கள், முன்மாதிரிதுண்டச்செய்கை போண்றவற்றின் மூலம் தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் அதற்கான உள்ளீடுகளையும் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தியிருந்தது. அதன் பயனாக இவ்வருடம் 376 ஹெக்டயரில் உழுந்து, பயறு, கௌபீ மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயிர்ச்செய்கை விபரம் பின்வருமாறு
நிலப் பண்படுத்தல்
சிறு போகத்தில் கிடைக்கும் மழையுடன் வயலை இரண்டு கிழமை இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று தடவை உழுது நன்கு தூர்வையாக்குவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு நிலம் பயிர்ச்செய்கைக்கு தாயார் செய்யப்படுகின்றது.
வடிகால் ஏற்படுத்தல்
வயல் உழுது மட்டப்படுத்திய பின்பு வயலை சுற்றி வரம்போரமாகவும் வயலின் நடுவில் நீர் வழிந்து செல்வதற்கான ஆழமான கான்கள் அமைக்கப்பட்டு வயலில் உள்ள நீர் சிறிதும் தேங்காதவாறு வழியவிடப்படும். வயல்நிலங்களில் மறுவயற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும்போது நீர் முகாமைத்துவம் மிக முக்கியம் ஏனெனில் நீர் தேங்கி நிற்கும் போது பயிர் அழுகி அழிவடையும் எனவே நீர் வழிந்தோடக்கூடியவாறு வடிகாலமைப்பு (Drainage) ஏற்படுத்தப்படுகின்றது.
விதைத்தல்
வரிசையில் அல்லது வீசி விதைக்கப்படுகின்றது. விதையிடும் கருவியினை பயன்படுத்தி வரிசையில் விதைப்பதாயின் ஏக்கருக்கு 8% பயறு போதுமானது. வீசி விதைப்பதாயின் 12% பயறு விதை போதுமானது. எனினும் வரிசையில் விதைப்பதே சிறந்தது. அதன் மூலம் அறுவடைஇ களை மற்றும் நோய்பீடை கட்டுப்பாடு இலகுவாக இருப்பதோடு விதைக்கான செலவும் குறைவு. விதையிடும் கருவியினை உங்கள் பகுதி விவசாயப்போதனாசியர்களை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம.
நீர்பாசனம்
விதைத்த பின்னர் வயலினை வெள்ளப்படுத்தி நீரினை வடியவிடுவதன் மூலம் பயிர் முளைத்தல் தூண்டப்படுகிறது. களிமண்ணை (Grumusol) பொறுத்தவரை 35-40 நாட்கள் வரை நீரை பிடித்து வைத்திருக்ககும் தன்மையை கொண்டிருப்பதால் பூக்கும் பருவத்தில் மட்டும் நீர்பாசனம் செய்தால் போதுமானது. அத்துடன் நீர்பாசனம் ஓருதடவை மட்டும் மேற்கொள்ளப்படுவாதல் வயல் நிலங்களில் களைகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதோடு களைகளை கையினால் அல்லது ஊடு களைகட்டும் கருவியினை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
பசளை பாவனை
நீர்பாசனம் மிக குறைவு ஆகையால் சிபாரிசு செய்யப்பட்ட பசளைகளுக்கு பதிலாக நுண்போசனை மூலகங்கள் அடங்கிய திரவ பசளைகள் பாவிக்கப்படுகின்றது.
அறுவடை
65-70 நாட்களில் அறுவடையை பெற்றுக்கொள்ளலாம் ஒரு ஏக்கரில் இருந்து 350-400 கி.கி வரை விளைச்சல் பெற்றுகொள்ளப்படுகின்றுது.
சேமிப்பு
அவரை குடும்ப பயிர்களின் தானியங்கள் களஞ்சியப்படுத்தும் போது பீடைகளின் (storage Pest) தாக்கம் அதிகம. எனவே அறுவடை செய்யப்பட்ட தானியங்களை நன்கு உலர வைத்து காற்று இறுக்கமான பிளாஸ்டிக் பரல் அல்லது மூன்று படையுள்ள பொலித்தீன் (Three layer bags) நீண்ட நாட்களுக்கு களஞ்சியப்டுத்தி வைத்திருக்க முடிவுதுடன் நல்ல சந்தை வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர். இச் செய்கை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.
- நீரை வினைத்திறனாகப்பயன்படுத்தலாம்.
- மண்ணின் வளம் மேலும் அதிகரிக்கும் அதாவது அவரை இன பயிர்களின் வேர்களில் உள்ள றைசோபியம் பக்ரீரியா மண்ணில் நைதரசன் இருப்பை அதிகரிக்கும். அத்துடன் அவற்றின் பயிர் மீதிகளும் மண்ணின் வளத்தை கூட்டுகின்றது.
- குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- உள்ளுர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
- சமபோசாக்கான உணவு உள்ளெடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணியை மீதப்படுத்தலாம்.
தொகுப்பு – அ.ஜெஸ்மன் கிறேசியன் மார்க்
விவசாயப்போதனாசிரியர்