சேதனமுறையில் மண்வளப்பாதுகாப்பும், பயிர் போசணையூட்டலும் மேற்கொண்டு யாழ் மாவட்த்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் வீட்டுத் தோட்டங்கள்

தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள பேரிடர் சவாலை எதிர் கொள்வதற்கேதுவாக வீட்டிலும் அதன் சுற்றுப் புறத்திலும் கிடைக்கக் கூடிய இயற்கையான உயிரியல் மூல வளங்களைப் பயன்படுத்தி போசாக்கு நிறைந்த உணவுப்பொருட்;களை, வீட்டுத் தோட்டம் செய்வதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளமுடியும். ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய நிறுவனத்தால் 2014 ஆண்டில் வெளியிடப்பட்டு தற்போது ஐந்தாவது பதிப்பாக வெளிவந்துள்ள “எல்லோருக்கும் ஒரு மரக்கறித்தோட்டம்” என்ற கையேட்டில் சுயமாக வீட்டில் மரக்கறி உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியத்தவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

COVID 19 தொற்றுக் காலப்பகுதியில் வீட்டுத்தோட்டச் செய்கையை மேம்படுத்தும் முகமாக விவசாயத்திணைக்களம், கமநல அபிவிருத்தித்திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அனைவரும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை கருத்திற்கொண்டு வீட்டுத்தோட்டத்தில் தொழிலாளர்கள்;, உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ் ஆரோக்கியச் செயற்பாட்டின் மூலம் வீட்டில் முடங்கியிருக்கும் காலத்தை பயனற்ற பொழுது போக்குகளில் செலவழித்து வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்காது பயனுள்ள வகையில் வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகின்றனர்.

“வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு நமக்குஉள்ளதா? என்பதை முடிவு செய்த பிறகு தோட்டம் அமைக்க வேண்டும். வெறும் ஆர்வத்தில் வீட்டுத்தோட்டத்தை அமைத்து விட்டு, சரியான பராமரிப்பும் கண்காணிப்பும் செய்யவில்லை என்றால், அது விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடும். மேலும் வீட்டுத்தோட்டத்தை இரண்டு வகைகளில் அமைக்கலாம். வீட்டின் தரைப்பகுதியில் போதிய இட வசதியும், மண் வளமும் இருந்தால் தரைப்பகுதியில் வீட்டுத்தோட்டம். அமைக்கலாம். போதிய இடவசதி இல்லாதவர்கள் பொதிகளில் அல்லது செடிவளர்க்கும் கொள்கலன் பயிர்ச்செய்கை மூலம் வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளமுடியும்.

திட்டமிட்டு நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்தின் சூழல் சமநிலை மாறாமல் இருந்தால் மாத்திரமே வீட்டுத்தோட்டத்தின் பயன்பாடு நிலைபேறானதாக அமையும். இவற்றுள் சூழலின் முக்கிய கூறாகவுள்ள மண், நீர், நுண்ணுயிர்கள் என்பனவற்றின் சமநிலையை மாறாமல் பேணுவதுடன் தாவரத்தின் போசணைமட்டம் பேணுதலும் அவசியமாகும்.

மண்வளப்பாதுகாப்பை கருதும் போது மண்ணின் கட்டமைப்பு, இழையமைப்பு, மண்ணுண்யிர்கள், மண்ணீர் என்பன தாவர வளர்ச்சிக்கு உகந்தளவில் பேணப்படுதல் வேண்டும். எந்த பிரதேசத்தில் வாழும் மக்களும் தம்மிடம் உள்ள வளங்களைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் செய்யலாம். அதற்கு அவர்கள் தம்மிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி மண்ணை உயிரூட்டம் செய்தல் வேண்டும். மண் உயிரூட்டச் செயன்முறைக்கு உயிர்கரி, ஜீவாமிருதம், இவற்றுடன் சேர்த்து கூட்டெரு, மண்புழுஉரம், திரவப்பசளை, மண்புழுவடிதிரவம், காற்றுட்டப்பட்ட மண்புழுதேநீர் போன்ற பல்வேறு தொழிநுட்பங்கள் உதவுகின்றன. வீட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாம் இலகுவாக இவற்றைச் செய்துகொள்ள முடியும்;. மேற்குறித்த முறைகளைப் பயன்படுத்தும் போது மண்ணின் வளம் மேம்படுத்தப்படுவதனால்; தாவரங்கள் ஆரோக்கியமாகவும் வீரியமாகவும் வளரும். இதனால் பீடைத்தாக்கங்களினால் பாதிப்படைவது குறைவடைவதுடன் தரமான விளைபொருட்களை பெறமுடியும்.

வீட்டுத்தோட்டத்தில் காய்ந்த இலை, கழிவுநீர் உள்ளிட்ட கழிவுகளுடன் சமையலறைக் கழிவுகளையும் சேர்த்து சேதன உரங்கள் தயாரித்து வீட்டுத்தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்துடன், ஓரிரு தேன் பெட்டிகளை வைத்து நமது குடும்பத்துக்குத் தேவையான தேனை அறுவடை செய்யலாம். தேனீக்களால் அயன் மகரந்த சேர்க்கை ஏற்படுவதால், பூக்கும் தன்மை கொண்ட எல்லா வகைச் செடிகளிலும் கூடுதலான விளைச்சல் கிடைக்கும்.
வீட்டுத்தோட்டங்களுக்குத் தேவையான விதைகளை நாமே உற்பத்தி செய்வதன் மூலம் தொடர்ச்சியான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதுடன் விதைகளை விற்பனை செய்தும் வருமானம் பெறமுடியும் வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்குத் தேவையான மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டிகள், பஞ்சகவ்யா உள்ளிட்ட சேதனப்பசளைகளை தயாரித்துக் கொடுப்பதன் மூலமாகவும் வருமானம் பெறமுடியும். வீட்டுத்தோட்டச்செய்கையில் குடும்ப அங்கத்தவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் குடும்ப ஆரோக்கியம் பேணப்படுவதுடன் மாணவர்கள் கல்வியில் பிரயோக அறிவை பெற்றிட உதவியாகவிருக்கும்.

இவ்வாறு வீட்டுத்தோட்டச் செய்கையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர் பலர் தங்களிடமுள்ள வளங்களைத் தங்கள் பலங்களாக்கி வீட்டுத் தோட்டச் செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் தீவகப் பகுதிலுள்ள அல்லைப்பிட்டிக் கிராமத்தில் விஜயசேகரம் சந்திரவதனா பொதிகளில் வீட்டுத்தோட்டச் செய்கையை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார் இவரது வீட்டுத் தோட்டத்தில் வெண்டி, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்றன நிலத்திலும் 150 பொதிகளில் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவ் வீட்டுத்தோட்டச்செய்கையாளர் தனது சுயதேவையை முழமையாக் பூர்த்தி செய்வதுடன் விற்பனைமூலம் மாதந்தம் ருபா 4000ஃஸ்ரீ இற்கு குறையாத வருமானத்தைப் பெற்று வருகின்றார்.

சங்கானை பிரதேசசெயலர் பிரிவின் வட்டுக்கோட்டை விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள வட்டுதென்மேற்கைச் சேர்ந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர் பாலசுப்பிமணியம் தனது வீட்டுச் சுற்றயலிலுள்ள நிலம் முழுவதிலும் பல்வேறு கொள்கலன்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நிலைபேறான வீட்டுத்தோட்டமொன்றைப் பராமரித்து வருகின்றார். இவரது வீட்டுத்தோட்டத்தில் மரக்கறிவகைகள், பழமரங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், வாசனைப்பயிர்கள், மூலிகைப்பயிர்கள் அடங்கலாக 50 இற்கும் மேற்பட்ட பயிரினங்கள் காணப்படுகின்றன. இவர் தனது பயிர்களின் பசளைத் தேவைக்காக கூட்டெரு, ஜீவாமிருதம் மீனமிலம் ஆகியவற்றை தானே தயாரித்து பயன்படுத்தி வருகின்றார் அத்தோடு விவசாயப்போதனாசிரியரின் வழிகாட்டலுடன் பயிர்களில் பூத்தலைத் துண்டும் ஊக்கியாக தேமோ கரைசலும் பாவிக்கின்றார். மேலும் பயிர்களில் பீடைத்தாக்கத்தைத் குறைப்பதற்காக வேப்பம் விதைக்கரைசல், உள்ளிக்கரைசல் பிரயோகித்து பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் தனக்கு தேவையான விதைகள், நாற்றுக்களை தானே உற்பத்தி செய்து பயன்படுத்துவதுடன் ஆர்வமுடையோருக்கும் விநியோகித்து வருகின்றார். தனது தோட்டத்தில் கிடைக்கும் உற்பத்தியை குடும்பத் தேவைக்கும் மேலதிகமானவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் பெற்று வருகின்றார்.

ஒரு காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்த சிங்கப்பூர் இன்று வணிகரீதியாக மொட்டை மாடி தோட்டங்கள் அமைத்து தற்போது அது மலேசியாவிற்கு தக்காளியை ஏற்றுமதி செய்கின்றது. நாங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் எம்மை சூழ்ந்துள்ள மனஅழுத்தங்களில் இருந்து விடுபடவும் வீட்டு முற்றத்தில் பயன்தரு காய்கறி மரங்களை நடுவதே சரியான தீர்வாகும் .

இதனைப் பின்பற்றி வீட்டுத்தோட்டச் செய்கைக்காக விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பயன்படுத்தி நாம் ஒவ்வொருவரும் வீட்டுத்தோட்டம் செய்வதன் மூலம் எமது குடும்ப ஆரோக்கியத்தை நாமே மேம்படுத்த முடியும்.
மேலதிய தகவல்களைத் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

திருமதி. கிருபவதனி சிவதீபன்,
விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர்,
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம்
யாழ்ப்பாணம்.

திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன்,
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம்
யாழ்ப்பாணம்.