முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல் நிகழ்வு நடைபெற்றது

கடந்த 15.06.2020 அன்று இயற்கையெய்திய முன்னாள் பிரதம செயலாளர் அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களது இரங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 23.06.2020 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அனைவராலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர், கௌரவ ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடலாளர்கள், பிரதம கணக்காளர்கள், உதவிச் செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாணசபை அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களது நினைவுகளை மீட்டிருந்தனர்.

பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்கள் தனது உரையில் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் பலவிதமான திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார் என்றும் பல கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் என்றும் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடல் செயன்முறையை ஸ்தாபிக்கும் நோக்கில் கருத்திட்டங்களை வெற்றிகரமாக வழிநடாத்திச் செல்வதற்கான கருத்திட்ட வடிவமைப்பு, மக்கள் பங்களிப்புடனான கிராமிய மதிப்பீடு, தர்க்க நெறிக்கட்டமைப்பு அணுகுமுறை என்பவற்றை மாகாணத்தில் அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினார் என்றும், கருத்திட்டங்களில் மக்களை பங்காளிகளாக மாற்றவேண்டும் என்பவற்றை வலியுறுத்தியதுடன் திட்டமிடல் செயன்முறைகளை திறம்பட ஸ்தாபித்தார் என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் ஆகியவற்றை திறம்பட நிர்வகித்து பல அடைவு நிலைகளை வடக்கு கிழக்கு மக்களிற்காக செயற்படுத்தினார் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஏனைய செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் தொடர்பாக பின்வரும் பல்வேறுபட்ட விடயங்களை தங்கள் நினைவுரைகளில் குறிப்பட்டிருந்தனர்.

அமரர். சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் 02.02.1949 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொன்னாலையில் பிறந்தார். அமரர் அவர்கள் 1977 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். அமரர் அவர்கள் ஒரு நிர்வாக சேவை உத்தியோகத்தராக இருந்தபோதும், அவரது நிர்வாகத் திறனையும், திட்டமிடலில் இருந்த அறிவையும் நோக்கும்போது அமரரது அறிவு, ஆற்றல், திறமை அனைவராலும் போற்றுதற்கு உரியதாகும். இவர் தான் பணியாற்றிய காலத்தில் பல உயர் பதவியுயர்வுகளை வகித்து அப்பதவிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து பெருமை சேர்த்தார். வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியவற்றில் 2002-2010 வரையான காலப்பகுதியில் பிரதம செயலாளராக பதவிவகித்து இம்மாகாணங்களுக்கு அளப்பரிய சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
உண்மை, நேர்மை, கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புத்தாக்க உணர்வு, இரக்கசுபாவம், நவீனத்துவசிந்தனை என்பவற்றை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த உயரிய பண்பாளாராக விளங்கினார். இவ்வாறான ஒரு மனிதாபிமானமிக்க பண்பாளன் மற்றும் தன்னார்வத்துடன் பல பணிகளை மேற்கொண்டு மக்களுக்காக சேவையாற்றிய மகான் எம்மைவிட்டு பிரிந்தது எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும என குறிப்பிட்டனர்.

அமரரது பிரிவு எம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவரின் வழிகாட்டலில் உருவாகியவர்கள் இன்றும் எம் மத்தியில் பல உயர் பதவிகளை வகித்து சிறப்பாக சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது இலட்சியப்பாதையை பின்பற்றி மக்களுக்கு சேவையாற்றுவதில் எமது பங்கு அளப்பரியது என வேண்டிக்கொண்டனர்.