நெற் செய்கையில் களை நெல்லின் பரவலினைக் கட்டுப்படுத்தல்

களை நெல்லானது பொதுவாக விவசாயிகளினால் பன்றி நெல் என அழைக்கப்படும். இது ஓராண்டு அல்லது ஈராண்டு களையாகும். இது உருவவியல் உடற்றொழிலியல் என்பனவற்றில் பெரும்பாலும் நெற்பயிரை ஒத்ததாகும். இதில் 30 – 40 வரையான இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சூழல் காரணிகளில் ஏற்படும் பரந்த அளவிலான மாற்றத்தினை சகித்து வளரக்கூடியன. இயற்கையான தெரிவின் மூலம் அதிகளவில் போட்டியிட்டு வளர்வதற்கு இவ் இனங்கள் இசைவாக்கம் அடைந்துள்ளமையால் நெற்தாவரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் விளைச்சலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும்.

இக் களை நெல் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மருதமடு பெரிய நீர்ப்பாசனக்குளத்தின் கீழ் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் பரவலாக காணப்படுகின்றது.

களை நெல் மிக விரைவாக முதிர்ச்சி அடைந்து செய்கை பண்ணப்படும் நெல்லினை அறுவடை செய்வதற்கு முன்பாக அனைத்து விதைகளையும் நிலத்தில் உதிர்பபதால் அடுத்துவரும் போகங்களில் இதன் பெருக்கம் அதிகரித்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும். களை நெல் சிலவேளைகளில் பெரிய பற்றையாக காணப்படும். பொதுவாக தனித் தாவரமாக நெல்லிற்கு மேல் வளர்ந்து காணப்படும். தண்டின் அடிப்பாகம் பெரும்பாலும் இளம் ஊதா நிறமாகவும் கரடு முரடாகவும் காணப்படும். கணுக்களில் வேர்கள் உருவாகி மீண்டும் முளைக்கும். இதன் இலை மடலானது செய்கை பண்ணப்படும் நெல்லின் இலை மடல்களின் உருவத்தினை ஒத்திருக்கும். சிலவேளைகளில் இளம் பச்சை நிறமாக காணப்படுவதுடன் இலைகள் தொங்கிக்கொண்டிருப்பது போன்று தோற்றமளிக்கும். அத்தோடு இலைகள் சொரசொரப்பாக காணப்படும். இதன் பூந்துணர் ஒரு அச்சிலான கூட்டுப்பூந்துணர் ஆகும். இது 10-20 செ.மீ வரை நீளமானது. பூந்துணர் பல நிறங்களில் காணப்படும்.இவை எந்த வர்க்கத்துடன் இனக்கலப்பு அடைகின்றதோ அதற்கேற்ப பூந்துணரின் நிறம் வேறுபடும். இது வைக்கோல் நிறம் முதல் கறுப்பு கபிலம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படலாம் இதற்கமைய மேற்கூரின் நிறமும் வேறுபடலாம். இதன் நீளம் 1-6 செ.மீ வரை காணப்படும். சில வேளைகளில் மேற்கூர் இல்லாதிருக்கலாம். இக் களை நெல்லின் பூந்துணர் ஒரே தடவையில் முதிர்ச்சி அடைவதில்லை. கீழேயுள்ள பூக்கள் மலரும் போது மேலேயுள்ள விதைகள் முதிர்ச்சியடைந்து கீழே விழும். இப் பண்பும் இனக்கலப்படையும் இனத்திற்கு ஏற்ப வேறுபடும். விதைகளின் எதிர்ப்பு தன்மை வாழ்தகவு என்பனவும் பெருமளவில் வேறுபடும். சில வேளைகளில் இதன் வாழ்தகவு 3-4 வருடங்களாகவும் காணப்படும். இவ் இயல்பு காரணமாக இதனை ஒரு குறிக்கப்பட்ட காலத்தினுள் கட்டுப்படுத்தல் அல்லது முற்றாக இல்லாது ஒழித்தல் என்பது சற்று கடிமான ஒன்றாகும். இதன் இனப்பெருக்கமானது விதைகள் மற்றும் கணுக்களில் உருவாகும் வேர்கள் மூலம் இடம்பெறும். இவை நீர், விலங்குகள், விவசாய உபகரணங்கள், காற்று என்பவற்றின் மூலம் இலகுவாக பரவல் அடையும்.

Things You Should Know Before Playing Slots Online or in Person

 

Real Money Slots That Accept PayPal

கட்டுப்படுத்தல்

01.களை நெல் வயலில் உள்ளதா என இனங்கண்டு அவற்றை பிடுங்கி அழித்தல்
02.வயலிலுள்ள களை நெல் விதைகளை இயலுமான வரை முளைக்கச்செய்து அதன் பின்னர் நிலத்தினை உழவு செய்தல்
03.விதைப்பதற்கு முன்னர் நிலத்தினை நன்றாக பண்படுத்தல்.
04.சுத்திகரிக்கப்பட்ட விதை நெல்லினை விதைத்தல்
05.நெல்லினை விதைப்பதற்கு பதிலாக நாற்றுக்களை வரிசைகளில் நடல் அல்லது விதையிடும் கருவிகளை பயன்படுத்தி விதைகளை இடல். இதன் மூலம் வரிசைகளிற்கு இடையில் முளைக்கும் களை நெல்லினை இலகுவாக பிடுங்கி அழிக்க முடியும்.
06.காலபோகத்தினை தொடர்ந்து வரும் சிறுபோகத்தில் நெற்பயிர் தவிர்ந்த ஏனைய பயிர்களை செய்கை பண்ணல் (உப உணவுப்பயிர்கள்)
போன்ற விடயங்களை முன்னெடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

ஆக்கம் –
எஸ்.லக்ஸ்மிதரன்
விவசாயப் போதனாசிரியர்
பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம்
முல்லைத்தீவு.