சின்ன வெங்காய செய்கை உண்மைவிதை உற்பத்தியில் கிளிநொச்சி விவசாயிகள்

சின்ன வெங்காயச் செய்கையை மேற்கொள்வதால் விவசாயிகள் குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றார்கள். தற்போது சந்தையில் வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்த நிலையில் அதிகஆர்வமும்; காட்டிவருகின்றார்கள்.

தொடர்ச்சியாக பெய்யும் மழையாலும் வறட்சியான காலநிலையினாலும் வெங்காயச் செய்கையானது பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் விதை வெங்காயத்திற்கு உச்சவிலையுடன் தட்டுப்பாடான நிலையும் உள்ளது. காலம் காலமாக விவசாயிகளால் வேதாள வெங்காய இனங்கள் செய்யப்பட்டுவரும் நிலையில் இவ்வினங்கள் காலபோகத்தில் சிறப்பாக பூக்கும் தன்மையைக் கொண்டு இருக்கின்றன. தற்போது COON-5 எனும் இனம் அறிமுகம் செய்யப்பட்டு உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வெங்காய உற்பத்திச் செலவில் 65 வீதத்திற்கு மேலான செலவு விதை வெங்காயத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் விதை வெங்காயத்திற்கு தட்டுப்பாடான காலங்களிலும் உற்பத்திச் செலவைக் குறைத்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வருடம் (2019) மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக 1.65 மில்லியன் ரூபா செலவில் பயனாளிகளுக்கு உண்மை விதை மற்றும் விதை வெங்காயம் வழங்கப்பட்டிருந்தது.

உண்மை விதைகளில் இருந்து சின்ன வெங்காயத்தினை உற்பத்தி செய்வதற்காக 100 பயனாளிகளுக்கு சிறுபோகத்தில் விதை வெங்காயம் வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் பல்வேறுபகுதிகளிலும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டிருந்ததுடன் அறுவடையின் போது அருகில் உள்ள விவசாயிகளும் இச் செய்கையினைப் பார்வையிட்டிருந்தனர்.

சுமார் ஒரு ஏக்கரிலிருந்து 5200 கிலோகிராம் விளைவினைப் பெற்று 250.00 தொடக்கம்; 300.00 ரூபா விலைக்கு சந்தைப்படுத்தி உள்ளதுடன் ஒருபகுதியினை அடுத்த போக நடுகைக்காக சேமித்தும் வைத்துள்ளனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட வெங்காயக் குமிழ்கள் நன்கு திரட்சியடைந்து இருந்ததுடன் இரண்டு அல்லது மூன்று குமிழ்களாக பிரிகையடைந்தும் காணப்பட்டன.

ஆனால் இவை பூக்கும் தன்மையினை பெரிதும் காண்பிக்கவில்லை. குறைந்தது 1½ மாதகாலம் சேமித்துவைத்து நடுகை செய்யும் பட்சத்தில் அவை மேலும் பிரிகையடைந்து பூக்கும் தன்மையினையும் காண்பிக்கும்.

மேலும் இச் செயற்றிட்டத்தின் அடுத்தகட்டமாக, 2019 காலபோகத்தில் உண்மை விதைகளை உற்பத்தி செய்வதற்காக 50 விவசாயிகளுக்கு COON-5 இன விதை வெங்காயம் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. கடும் மழையினை தவிர்த்து ஜனவரி மாதமளவில் நடுகை செய்து உண்மை விதைகைளை அறுவடை செய்திருந்தனர்.

உண்மைவிதை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கு கல்வனைசிலான மழை பாதுகாப்பு கூடாரங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

பொதுவாக பனிக்காலங்களில் வெங்காய தாள்களில் ஏற்படக்கூடிய தவளைக்கண் நோய் (Purple blotch)  மற்றும் குமிழ்களில் ஏற்படக்கூடியஅந்திரக்நோஸ் (Colletotrichum spp) மற்றும் குமிழ் அழுகலை கட்டுப்படுத்தி செய்கையில் வெற்றிகரமாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பயிர்செய்கை பாதுகாப்பு கூடாரங்கள் வழங்கப்பட்டன.

விதைகளை பூந்துணருடன் அறுவடை செய்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிழலில் காயவிட்டு உலர்த்தி பின்னர் விதைகளை வேறாக்கிப் பெற்றுக் கொண்டுள்ளனர். வுpதைகளை வேறாக்கி பிரித்தெடுப்பதற்காக விதை பிரித்தெடுப்பு இயந்திரம் செயற்றிட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 100 Kg அளவிலான உண்மை விதைகளை எமது விவசாயிகள் அறுவடை செய்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது முதன் முறையாகும். இவற்றின் பெறுபேறாக அனைத்து விவசாயிகளும் ஆர்வத்துடன் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு சிறந்த விளைவினைப் பெற்றிருந்தனர்.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்தே பெரிய மற்றும் சின்ன வெங்காய உண்மை விதைகளை தருவித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிளிநொச்சிப் பிரதேசத்திலும் சின்ன வெங்காயத்தில் இருந்து உண்மை விதைகளைச் சிறப்பாக உற்பத்தி செய்வதன் மூலம் உண்மை விதைகளை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் நிரூபித்துள்ளனர். இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிராக்கவியல் நடவடிக்கைகளில் புதிய நுட்பங்களை உட்புகுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெற்றக்கொள்ள விரும்புவோர் அருகில் உள்ள விவசாயப் போதனாசிரியர் அலுவலகத்தை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்திலும் ஆலோசனை மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Please follow and like us:
0