வடக்கு மாகாணத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான மனிதவளத்தை அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு இளைஞர்களைப் பயிற்றுவித்து வேலைவாய்ப்புகளுடன் இணைப்பதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய தொழிலாளர் தேவை மற்றும் தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (25.11.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், முதலீட்டாளர்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி, அவர்களது தொழிற்துறைத் தேவைகளுக்குப் பொருத்தமான மனிதவளம் வடக்கு மாகாணத்தில் உள்ளதா என்பதாகும் என்றார்.
இதற்குப் பதிலளிக்கக்கூடிய வகையில், மாகாணத்தில் உள்ள திறன்சார் மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது திறன்கள், பயிற்சிகள் மற்றும் தொழில் அனுபவங்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் அவசியம். அதேபோன்று, எந்தெந்தத் தொழில்களுக்கு வேலைவாய்ப்புக் கேள்வி அதிகமாக உள்ளது, தொழில் வழங்குநர்களுக்கு எத்தகைய திறன்கள் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் தனித்தனியாகப் பணியாற்றினாலும், அவற்றுக்கிடையில் போதிய ஒருங்கிணைவு காணப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஏற்கெனவே உள்ள பதிவுகளையும் தகவல்களையும் ஒருங்கிணைத்து, தேவையான இடங்களில் மேலதிகத் தரவுகளைச் சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார். இக்கலந்துரையாடல் அதற்கான முதல்கட்ட முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ;ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், மனிதவள முகாமைத்துவத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொழில் தேடுவோர், தொழில் வழங்குநர்கள், திறன்சார் மற்றும் திறனற்ற தொழிலாளர்கள் தொடர்பான துல்லியமான தகவல்களைத் திரட்டுவதுடன், சந்தையில் எந்தெந்தத் தொழில்களுக்கான தேவை காணப்படுகின்றது என்பதையும் ஆய்வின் ஊடாக அடையாளம் காண வேண்டும் என்றார்.
தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுவில் தாம் அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், முன்மொழியப்படும் மாற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாணத்தின் தேவைகளையும் கருத்துகளையும் உள்வாங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 2027 ஜனவரி மாத இறுதியில் வடக்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோப்பாய், பூநகரியில் முன்னோடி கள ஆய்வு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், தொழில் திணைக்களம், பிரதேச செயலகங்கள், தொழிற்துறை அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு உண்மையான மனிதவளத் தரவுகளைச் சேகரிப்பதற்கான கள ஆய்வை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் முதற்கட்டமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலும் முன்னோடி ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்களிடம் உள்ள பதிவுகளை ஒன்றிணைத்து, அவற்றின் அடிப்படையில் மனிதவள இருப்பு, தொழில்துறைத் தேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் தொடர்பான வரைபடத்தைத் தயாரிப்பதற்கு இவ்வாய்வு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும் இணைக்கப்பட வேண்டும்
மாகாணத்தில் செயற்படும் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பாடநெறிகள், பயிலுநர்களின் எண்ணிக்கை, பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் மாணவர்களின் விவரங்கள், உள்ளகப் பயிற்சிக்கு அனுப்பப்படும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் தொழிற்சந்தையுடனான தொடர்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தொழில் வழங்குநர்கள் தமது நிறுவனங்களுக்குப் பயிற்சிப் பெறுநர்களையோ அல்லது குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கொண்ட பணியாளர்களையோ கோரும்போது, அவர்களுக்குத் தேவையான தகவல்களை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்கள் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதிலும், உள்ளகப் பயிற்சிகளைப் பெறுவதிலும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தொழிற்கல்வி நிறுவனங்களும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதன் மூலம் தொழில் வழங்குநர்களின் தேவைக்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிப்பதுடன், அவர்கள் கற்கும் காலத்திலேயே எதிர்கால வேலைவாய்ப்புகளுடன் இணைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்துறைத் தேவைகளை அடையாளம் காண்பதன் அடிப்படையில், அதற்குப் பொருத்தமான புதிய தொழிற்பயிற்சிப் பாடநெறிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. இதற்கான மேலதிக வழிகாட்டல்களையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்காக மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை வடக்கு மாகாணத்துக்கு அழைத்து கலந்துரையாடலை ஏற்பாடு செய்யத் தாம் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் உள்ள மாண்புமிகு ஹரிணி அமரசூரியவும் இவ்விடயம் தொடர்பில் விசேட அக்கறை கொண்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, முறைசாரா தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் திறனற்ற தொழிலாளர்களுக்கான கேள்வி எவ்வாறு உள்ளது என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறியவுள்ளதாகக் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, கோப்பாய் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னோடி கள ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் மனிதவளத் திட்டமிடல் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கோப்பாய் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, உயர் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தொழிற்துறை அபிவிருத்திச் சபை, தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, மாவட்டத் திறன் துறை அபிவிருத்திப் பிரிவு மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



