வடமாகாணத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்தாபிக்கப்படவுள்ள தானியக் களஞ்சியசாலைகள்

வடமாகாண ஆளுநர் அவர்களின் பணிப்பின் பேரில் வடமாகாண விவசாயத் திணைக்களமானது மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்போடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் (CSIAP) கீழ் உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிய அளவிலான தானியக் களஞ்சியசாலை கட்டமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையவுள்ள தானியக் களஞ்சியமானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் கருவேலங்கண்டல் கிராமத்தில் வீதியை அண்மித்ததாக நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் காணப்பட்ட 3 ஏக்கர் அரசகாணி இந்நோக்கத்திற்காக மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலரிடம் கோரப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 55,000 mt நெல்லானது உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் ஏறத்தாழ 41,500 mt காலபோக அறுவடையின் போது பெறப்படுகின்றது. குறித்த அறுவடையானது ஏககாலத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறுவதனால் நெல்லைக் கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகளும் அரிசி ஆலை உரிமையாளர்களும் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முற்படுகின்றனர். இதன்போது களஞ்சிய வசதியற்ற நெற்செய்கையாளர்கள் வேறு வழியின்றி பேரம்பேசும் ஆற்றல் அற்றவர்களாக வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு தமது உற்பத்தியினை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுகின்றது. மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள தானியக்களஞ்சிய சாலையின் மூலம் இந்நிலைமையில் நிச்சயமாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். குறித்த களஞ்சிய சாலையானது 200 அடி நீளம் 60 அடி அகலம் கொண்டதாக 1000 மெற்றிக் தொன் அளவிலான நெல்லினை சேமிக்க கூடியதாக கட்டமைக்கப்பட உள்ளதுடன் தலா 2400 (60 x 40) சதுர அடி பரப்பளவுடைய 3 நெல் உலர்த்தும் தளங்களையும் கொண்டதாக அமையவுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஏறத்தாழ 50 சதவீதமான நெற்காணிகள் 3 ஏக்கரிற்கும் அதிக பரப்பளவு கொண்ட காணி உரிமையாளர்களுக்கு உரித்தானவையாக காணப்படுகின்றன. மாவட்டத்தின் சகல மக்களும் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ளவர்களாக காணப்படும் சூழலில் தமது வீடுகளில் அறுவடையினை சேமித்து வைக்கும் வசதி பெரும்பாலானவர்களிடம் தற்போது இல்லை. களஞ்சிய நிர்மாணம் நிறைவுறும் நிலையில் இவ்வாறான நிலைமையிலுள்ள விவசாயிகளும் தங்கள் உற்பத்திக்கான தகுந்த விலை கிடைக்கும் வரை அறுவடையினை சேமித்து வைத்திருந்து அதிக இலாபத்துடன் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.