26 DCC Jaffna sin

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்ட முன்மொழிவுகள், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வு காணப்படாத மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலர் ம.பிரதீபன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய இணைத் தலைவரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன், கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இருமடங்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சில திட்டங்கள் அடுத்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களைச் செயற்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உரிய அதிகாரிகள் கலந்துகொள்வதைத் திணைக்களங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கவுள்ள நிலையில், அதனை உரிய வகையில் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்குத் திணைக்களங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கோரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2026ஆம் ஆண்டுக்கான ‘சமூக சக்தி’ தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.

அத்துடன், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 4,372 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீதி வலையமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற இடங்களைச் சீரமைப்பதற்கான முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன. வீதிப் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வடிகால்களைப் பாதுகாப்பாக மூடுதல், பாடசாலைகளுக்கு அருகில் பாதசாரிக் கடவைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலகம், மத்திய அரசுத் திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றால் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. வீடமைப்பு, விவசாயம், கிராமிய வீதி அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள சுழலும் உயிரியல் சுத்திகரிப்பு ஆலையையும், நாவற்குழிக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு உயிரியல் சுத்திகரிப்பு ஆலைகளையும் கையளிப்பது தொடர்பான விடயமும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, நெடுந்தீவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குக் கடற்படையினரின் பங்களிப்புடன் எரிபொருளைக் கொண்டு செல்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் துறைசார் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களும் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், ச.ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், பிரதி மேயர் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்களும் பங்கேற்றனர்.

மேலும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.