வடக்கு மாகாணத்தில் நூலகச் சேவைகளை ஒருங்கிணைத்து, அவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாரிக்கப்பட்ட வரைவு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (03.11.2026) செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
குறித்த வரைவை ஆராய்ந்த ஆளுநர், அதனை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபைக்கு அனுப்பி, அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுடன், இப்பணியகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான முன்மொழிவு ஏற்கெனவே ஆராயப்பட்டு வந்த நிலையில், அதற்கான வரைவை மேலும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவுக்கு இரண்டு மாதங்களுக்குள் தனது பணிகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது வரைவு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆணையாளர், வவுனியாப் பல்கலைக்கழக நூலகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

