விவசாயிகளாகிய உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நாம் விவசாய உள்ளீடுகளையும் உபகரணங்களையும் வழங்குகின்றோம். அதற்குப் பதிலாக, எமது மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) பங்களிப்பை உயர்த்துவதற்கு நீங்களும் உதவ வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று (28.10.2026) புதன்கிழமை வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்கிய அச்சாணிகளாக விவசாயமும் கடற்றொழிலும் விளங்குவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பதே இத்தகைய உதவிகளின் முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது இறக்குமதியைக் குறைத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வலுசேர்க்க முடியும் என்றும், அதில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
நெற்செய்கைக்கு அப்பால், ஏனைய பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடுவதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். உற்பத்திச் செலவைக் குறைத்து, நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்திப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு ஏற்ற உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சில காலங்களில் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது சந்தையில் அவற்றின் விலைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் எந்தக் காலப்பகுதியில் எந்தப் பயிர்களைச் செய்கின்றனர், எவ்வளவு உற்பத்தி கிடைக்கும் என்பன தொடர்பான தகவல்களை அரசாங்கம் திரட்டுவதாகவும் தெரிவித்தார். அறுவடைக் காலங்களில் உள்ளூர் உற்பத்திகளுக்குச் சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில், தொடர்புடைய விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாகத் தீர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்டத்திலுள்ள 2,500 விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மொத்தம் 121 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இன்று 250 விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டச் செயலர், வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர், மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




