15 women sin

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிற்துறை திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது, கைத்தொழில் திணைக்களத்தின் கீழ் வவுனியா – வேப்பங்குளம் நெசவு மையத்தை வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய கட்டடமாக மாற்றுவதற்கான பணிகள் மற்றும் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் நடப்பாண்டில் இடம்பெறவுள்ள வர்த்தகக் கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக முதியோர் இல்லங்களை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் உதவிகள் மற்றும் அவசியமான உபகரணங்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். கூட்டுறவுத்துறையில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பான இலக்குகளும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழிற்துறை திணைக்களத்தின் ஊடாக குறைந்த வட்டியில் விநியோகிக்கப்படவுள்ள கடன் திட்டத்தை விரைவுபடுத்துவதோடு, அவை உரிய காலத்தில் தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்தில் மாகாண சபையில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கடன் திட்டங்களைக் கையாள்வதற்காகத் தனியான அலகு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் கொடையாக வழங்கப்பட்ட நிதிமூலம் தொழில்முனைவோரின் முன்னேற்றம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், மாகாணத்திலுள்ள தொழில்முனைவோருக்குச் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகத் தொழிற்துறை திணைக்களம் தற்போதைய காலத்திற்கேற்ப தனது செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழான பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் புத்தாக்கமாகச் சிந்தித்துத் தமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்துவதை ஆளுநர் பாராட்டியதுடன், பிளாஸ்ரிக் பாவனையைக் குறைக்கும் வகையில் அரச திணைக்களங்கள் பனை உற்பத்தி மூலமான பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்குமாறும், அரச திணைக்கள நிகழ்வுகளில் பனை உற்பத்திசார் உணவுப் பண்டங்களை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கள் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பனை அபிவிருத்திச் சபையூடாக அதற்கான காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வொன்றை நடத்துமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சின் பதில் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.