LG building – sinhala

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் முறைப்பாடளித்தால், அதை உடனடியாகச் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காது, கட்டுமானம் முடிவடைந்த பின்னரே ஆராயும் நிலை காணப்படுவது குறித்து மக்கள் தமக்கு பல முறைப்பாடுகளை முன்வைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், மக்களின் இவ்வாறான முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தவறும்பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (26.11.2025) நடைபெற்றது.

உள்ளூராட்சிமன்றங்களின் ஆதன மதிப்பீட்டு நடவடிக்கைக்கு விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதியளவில் கிடைக்கப்பெறாத நிலையில் தனியார் ஊடாக அந்தப் பணிகளை நடைமுறைப்படுத்துவதாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 2026ஆம் ஆண்டுக்குள் அந்தப் பணிகளை நிறைவுறுத்த வேண்டியிருப்பதால், தனியார் மற்றும் விலைமதிப்பீட்டுத் திணைக்களம் இரண்டினதும் ஒத்துழைப்புடன் அதைச் செய்து முடிக்குமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து முன்னேற்ற மீளாய்வு இடம்பெற்றபோது, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலாப் பணியகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

பாடசாலை நேர மாற்றத்துக்கு ஏற்ப போக்குவரத்து ஒழுங்குகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தெரியப்படுத்தியதுடன், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழான பேருந்து நிலையங்களின் சீரமைப்புப் பணிகளின் உத்தேச மதிப்பீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழான முன்னேற்றங்கள் ஆராயப்பட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தின் செயற்பாடுகள் பின்னடைவான நிலைமையில் இருப்பது அவதானிக்கப்பட்டதுடன், ஒப்பந்தகாரர்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், விரைந்து சீர் செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறைப் பணியகம் ஏனைய திணைக்களங்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் தரப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியதுடன், சுற்றுலாத்தலங்களில் மலசலகூடம் இல்லாமல் உள்ளமை, இருக்கின்ற மலசலகூடங்களும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்லாமை ஆகிய விடயங்களையும் சுட்டிக்காட்டினார்; மேலும், இருக்கின்ற மலசலகூடங்களைப் புனரமைத்து துப்புரவு நடவடிக்கைகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதற்கான ஆலோசனையையும் வழங்கினார்.

முதலீட்டாளர்களின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சபைகளின் செயலாளர்கள் நேர்சிந்தனையுடன் அதனை அணுக வேண்டும் என்றும், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களால் வரி வருமானங்களைச் சபைகள் பெற்றுக்கொள்ளும் நிலையில், அத்தகைய முதலீட்டாளர்களுக்கான உதவிகளைச் செய்து கொடுக்குமாறும் கோரினார்.

மோசமான காலநிலை எதிர்வரும் நாட்களில் எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அவற்றுக் தயாராக இருக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டதுடன், சபைகளின் செயலாளர்கள் பிரதேச இடர்முகாமைத்துவக் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், இடர்நிலைமைகளின்போது செயலாளர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை இயங்குநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாணப் பணிப்பாளர்கள், மாநகர சபைகளின் ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.