21 cultural visit sin

மத்திய அரசாங்கத்தின் ஊடாக கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள கலாசார நிலையங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரத்தியேக கோரிக்கைகளை முன்வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள கௌரவ அமைச்சர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த விசேட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இந்தச் சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தில் கலாசார மற்றும் தொல்லியல் ரீதியாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும், தற்போதைய செயற்றிட்டங்களில் நடைமுறையிலுள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இம்முக்கிய கலந்துரையாடலில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.