20 sin liquid fertilizer

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஏதேன் விவசாய நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவும், சேதன விவசாய உள்ளீடுகள் அறிமுக விழாவும் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது முயற்சிகள் சிலவேளைகளில் தோற்றுப் போகலாம். அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை. அது தோல்வியுமல்ல. ஆனால், நாம் எப்போது முயற்சியையே கைவிடுகின்றோமோ அப்போதுதான் உண்மையாகவே தோல்வியடைகின்றோம்.

இந்த இளைஞன் பல சவால்களைத் தாண்டித் தனது விடாமுயற்சியாலேயே இந்தளவு தூரம் சாதித்திருக்கின்றார். இயற்கையான பூச்சி விரட்டிகள், நாசினிகள் மற்றும் இயற்கைப் பசளை என்பவற்றை எமது விவசாயிகள் மிக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் திரவ வடிவில் தயாரித்திருப்பதென்பது சாதாரண விடயமல்ல.

இன்று சமூகத்தில் எல்லாவற்றிலும் மாபியாக்களின் ஆதிக்கம் வியாபித்திருக்கின்றது. அந்த மாபியாக்கள் யார் நல்லது செய்ய நினைத்தாலும் அவர்களை விடாது தூற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏனெனில், கறைபடிந்த கரங்களுடன் இருப்பவர்கள்தான் – அவர்கள் அதிகாரிகளாகவோ அல்லது அரசியல்வாதிகளாகவோ இருக்கலாம் – அவ்வாறானவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சமூகத்தில் நல்லது செய்பவர்களைப் பற்றித் தவறான அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

எனவே, உங்களின் இந்தச் சிறந்த முயற்சியையும் நிச்சயம் சில மாபியாக்கள் குழப்பவோ அல்லது தடுக்கவோ முற்படுவார்கள். நீங்கள் அதையும் தாண்டி வெற்றி பெற வேண்டும். இளம் விவசாயிகளும் இளம் தொழில்முனைவோரும் உருவாக வேண்டும் என்ற எங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் குணசேகரம் ரஜிதரன் திகழ்கின்றார். இவ்வாறானவர்களை நாம் இன்னும் ஊக்கப்படுத்தி வலுப்படுத்த வேண்டும்.

எமது வடக்கு மாகாணம் இயற்கை விவசாய உற்பத்தியில் முன்னுதாரணமானதொரு மாகாணமாக மாறவேண்டும். அதற்கு இவ்வாறான தொழில்முனைவோர் தங்கள் உற்பத்திகளை இன்னும் பெருக்க வேண்டும். எதிர்காலத்தில் இவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக உருவெடுக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என்றார்.

குறித்த இளைஞரின் இந்தச் சேதன விவசாய முயற்சிக்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் ஊடாக தொடர்ச்சியான பல உதவிகளை வழங்கியுள்ளது.

2021ஆம் ஆண்டில் 50 சதவீத மானியத்தின் கீழ் சேதன பீடைநாசினி கொட்டகை அமைப்பதற்காக 6 இலட்சம் ரூபா நிதியுதவியும், இலைச்சாறுகளைப் பிரித்தெடுப்பதற்கான அரைக்கும் இயந்திரம் மற்றும் பீடைநாசினிகளை அடைப்பதற்கான 2000 போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், பீடைநாசினி தயாரிப்பிற்கான தாவரத் தண்டுத் துண்டங்களும் திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்தன. மேலும், 2025 ஆம் ஆண்டில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் சேதன உற்பத்தித் திட்டத்தினூடாக இவரது கோரிக்கைக்கு இணங்க மேலதிகமாக 650 போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இவரது உற்பத்திகள் விவசாயத் திணைக்களத்தின் முன்மாதிரித் துண்டங்களில் சில விவசாயிகளுக்குப் பரீட்சார்த்தமாக வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் இ.விஜயகுமார், விவசாய ஆராய்ச்சித் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் ஸ்ரீஸ்பரலிங்கம் ராஜேஸ்கண்ணா, வடக்கு மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி.கிருபவதனி, முன்னாள் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கி.சிறிபாலசுந்தரம் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.