51 iranai agri sin

தங்களை மென்மேலும் மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் மக்களுக்குத்தான் அரசாங்கத்தால் உதவ முடியும். மாறாக, அரசாங்கம் வழங்குபவற்றை மாத்திரம் பெற்றுக்கொண்டு சோம்பேறிகளாக இருக்க நினைப்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் மக்கள், தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தித் தமது கிராமத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் காட்டும் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இரணை இலுப்பைக்குளம் கிராம விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தியின் அறுவடை, மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ர.பிரியதர்சினி தலைமையில் இன்று (26.03.2026) வியாழக்கிழமை நண்பகல் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அறுவடையை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வெறுமனே வீதிகளை அமைப்பதாலோ அல்லது கட்டடங்களைக் கட்டுவதாலோ மட்டும் அபிவிருத்தியின் உண்மையான இலக்குகளை நாம் எட்டிவிட முடியாது. முதலில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். கடந்த வருடம் நான் உங்கள் கிராமத்துக்கு களப் பயணம் மேற்கொண்டிருந்த போது, நீங்கள் விவசாயத்தில் காட்டிய அதீத ஆர்வத்தின் அடிப்படையில்தான், விவசாயத் திணைக்களம் ஊடாக இந்தப் பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தியை மேற்கொள்வதற்கான விசேட திட்டம் உங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

விவசாயப் போதனாசிரியர் குறிப்பிட்டது போல, இங்குள்ள பல விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் புதியதாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். இவ்வாறு ஆர்வம் உள்ள சமூகங்களுக்குத்தான் எங்களாலும் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க முடியும். விவசாயிகளின் அயராத முயற்சியும், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் சிறந்த கடமையுணர்வுமே இந்த வெற்றிகரமான விவசாய நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உங்களது உற்பத்திகளை உள்ளூர் சந்தை வாய்ப்புகளோடு மாத்திரம் மட்டுப்படுத்திவிடாது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபட வேண்டும். எமது விவசாயிகளின் உற்பத்திகளை, இடைத்தரகர்களின் தலையீடுகளின்றி எவ்வாறு சிறந்த முறையில் சந்தைப்படுத்துவது என்பது குறித்து நாங்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். தற்போது வெளிநாட்டு ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு ‘வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுடனும் நாங்கள் இது தொடர்பில் பேசி வருகின்றோம். அவர்களுக்குத் தரமான விவசாய உற்பத்திப் பொருட்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுவதால், நீங்கள் உற்பத்திகளைச் சீராக வழங்கும் பட்சத்தில், அவர்களுடன் இணைந்து உங்களது பொருட்களை ஏற்றுமதி செய்யவும் முடியும்” எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பின் ஊடாக 10.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்தப் பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தி மற்றும் விவசாயக் கிணறுகள் புனரமைப்புச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு, தலா 1 இலட்சத்து 93 ஆயிரம் ரூபா பெறுமதியான உண்மை விதை உற்பத்திக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டிருந்ததோடு 30 விவசாயக் கிணறுகளும் புனரமைச்செய்து கையளிக்கப்பட்டன.

மூன்று மாத காலத்தைக் கொண்ட பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், தலா ஆறு சதுர மீற்றர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வெங்காய விதைகளைக் கொண்டு, எதிர்காலத்தில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காய உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இந்த அறுவடையை ஆரம்பித்துவைக்கும் செயற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்ட மாவட்டச் செயலாளர், மடு பிரதேச செயலாளர், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.