வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரிடமும் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த வீதிப் போக்குவரத்து விபத்து விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை இன்று (19.08.2026) புதன்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பூநகரிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பான வீதிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், வீதிப் போக்குவரத்து விபத்துக்களின் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்பான வீதிப் பயன்பாட்டை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் வரவேற்புரையாற்றியதுடன், தொடர்ந்து வீதிப் போக்குவரத்து விபத்துக்களுக்கான பொதுவான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் தொடர்பில் யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தின் செயலாளர், குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் சயந்தன் விளக்கமளித்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சத்திரசிகிச்சை நிபுணரும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான மருத்துவர் சிவானந்தன் சசிகரன், பாதுகாப்புப் பட்டி அணிதல், தலைக்கவசம் பயன்படுத்துதல் மற்றும் வேகக் கட்டுப்பாடு உள்ளிட்ட வீதிப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தின் தலைவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமiயின் சட்;டமருத்துவ அதிகாரியுமான மருத்துவர் உருத்திராபதி மயூரதன், வீதிப் போக்குவரத்து விபத்துகளின் சட்டரீதியான விளைவுகள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
இந்த விழிப்புணர்வுச் செயற்பாடு, ஒரு தனிநிகழ்வாக மட்டுப்படுத்தப்படாமல் மாகாணம் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, ஏனைய பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு, மருத்துவ மற்றும் சட்ட நிபுணர்களின் அறிவுரைகளுடன் வீதிப் பாதுகாப்பு தொடர்பான மக்களின் விழிப்புணர்வு மேலும் வலுப்படுத்தப்படவுள்ளது.
‘வீதிப் பாதுகாப்பு அனைவரினதும் பொறுப்பு’ என்ற நோக்குடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டின் மூலம், பாதுகாப்பான வீதிப் பயன்பாட்டை ஊக்குவித்து, வீதிப் போக்குவரத்து விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளையும் காயங்களையும் குறைப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரவுள்ளன.



