24 garbage eng

வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரிய முறையில் எரியூட்டி முகாமைத்துவம் செய்வதற்கான நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (16.11.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எரியூட்டுவதற்குமான நிலையமொன்றைத் தனியார் முதலீட்டின் ஊடாக அமைப்பதற்கு முதலீட்டாளர் ஒருவர் முன்மொழிவை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

குறிப்பாக, இத்தகைய நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவுசெய்தல், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள், தொழில்நுட்பத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கருத்துப் பரிமாறப்பட்டது.

மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான தேவையைக் கருத்திற்கொண்டு, முதலீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்வதற்கான கலந்துரையாடலாக இது அமைந்தது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி மற்றும் முதலீட்டாளர் தரப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.