21 KHP Sin

பரீட்சை மையக் கல்வியை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், சவால்களுக்கு முகங்கொடுக்கும் துணிச்சலும், சமூகப் பொறுப்புணர்வும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பொன்விழா (1976 – 2026) நிகழ்வு, பாடசாலை அதிபர் யோகராசா தயாளன் தலைமையில் இன்று (14.11.2026) சனிக்கிழமை பிற்பகல் இராமநாதன் வீதி, நாச்சிமார் கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
“நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இப்பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்புச் செய்துள்ளேன். அந்த வகையில், இன்று ஒரு விருந்தினராக மாத்திரமன்றி, இப்பாடசாலையின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்த ஒருவராகவே இங்கு வருகை தந்துள்ளேன். 1976ஆம் ஆண்டு நகரின் புறநகர்ப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, கடந்த ஐந்து தசாப்தங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பால், இன்று நகர்ப்புறத்திலுள்ள முன்னணி ஆரம்பப் பாடசாலைகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. தரம் ஒன்றில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் காட்டும் ஆர்வமும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் சிறந்த பெறுபேறுகளும் இப்பாடசாலை மீது சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

அரச நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் வெற்றி தோல்வி தலைமைத்துவத்திலேயே தங்கியுள்ளது. ஒரு நிறுவனத்தில் வளங்கள், கட்டடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் இருந்தாலும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி நெருக்கடிகளின்போது துணிச்சலாக முடிவெடுப்பதே சிறந்த தலைமைத்துவமாகும். நீண்டகாலமாகப் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விச் சூழலில் மாணவர்கள் வளர்க்கப்பட்டதால், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் குறைவடைந்துள்ளன. இதன் விளைவாக, இன்று பல நிறுவனங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்யான விமர்சனங்களுக்கும் அழுத்தங்களுக்கும் பயந்து, துணிச்சலாக முடிவெடுக்கத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. பொய்யான விமர்சனங்களுக்குப் பயந்து எதுவுமே செய்யாமல் இருப்பது தலைமைத்துவம் அல்ல.

இந்த நிலையை மாற்றி, தலைமைத்துவப் பண்புகளும் நற்பண்புகளும் கொண்ட எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் நன்றாகப் படித்துப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், சக மாணவர்களுக்கு உதவுதல், உண்மையைப் பேசுதல், தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மற்றவர்களின் கருத்துகளை மதித்தல் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாளை நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவிக்குச் சென்றாலும், சமூகத்துக்குப் பயனளிக்காவிட்டால் அந்தக் கல்வியால் முழுமையான பயனில்லை. இந்தப் பொன்விழா நிகழ்வானது கடந்த காலச் சாதனைகளை நினைவுகூர்வதுடன் மாத்திரமன்றி, அடுத்த 50 ஆண்டுகளுக்கான புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஆரம்பமாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இப்பொன்விழா நிகழ்வில் பொன்விழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும், மாணவர்களின் கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிறுவர் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் ஆகியோருடன், அதிதிகளாகத் தொழிலதிபர்களான கந்தையா பாஸ்கரன், லயன் சின்னராசா சண்முகானந்தன், தேசமான்ய லயன் கலாநிதி செல்லத்துரை திருமாறன் மற்றும் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.