o5 karate sin

ஒரு சமூகத்தின் உண்மையான செல்வம் அதன் கட்டடங்களிலோ பொருளாதாரத்திலோ இல்லை. அது எமது பாரம்பரியம், பண்பாடு, கலைகள் மற்றும் வீர வரலாற்றில்தான் தங்கியுள்ளது. தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய அதிவேக உலகில், எமது வேர்கள் மங்கிவிட்டால் நாம் முன்னேற்றமடைந்தாலும் எமது அடையாளத்தை இழக்க நேரிடும். கல்வியால் மனிதனின் அறிவு வளரும், ஆனால் வாழ்க்கையை முழுமைப்படுத்துவது கல்வி மட்டுமல்ல, அறிவுடனான பண்பு, திறமையுடனான ஒழுக்கம், கல்வியுடனான தலைமைத்துவம் ஆகியன இணைந்தால்தான் ஒரு முழுமையான மனிதன் உருவாகின்றான். இன்றைய சமூகப் பிறழ்வுகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டுமாயின், அவர்களுக்குக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் ஊடான சிறந்த மாற்றுப் பாதையை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும், இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சிவலீமன் சிலம்பம் தற்காப்பு கலைமன்றம் மற்றும் பாபு இஷpன் ரியூ கராத்தே பாடசாலை ஆகியன இணைந்து முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், மாணவர்களின் பாரம்பரிய வீரக்கலைகளின் பிரம்மாண்டமான அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். குறிப்பாக, சிலம்பு, நெஞ்சாக், வேல்கம்பு, சுருள்வாள், மடு உள்ளிட்ட பல்வேறு வீரக்கலைகளைச் செய்து காட்டி மாணவர்கள் அதிதிகளுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகளின்போதும் வாள் – கேடயத்துடனான சாகசங்கள், கராத்தே மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் பல்வேறு வீரதீரச் செயல்களை மாணவர்கள் அரங்கேற்றினர். இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு மைதானத்தில் 150 மாணவர்கள் வீரர்கள் இணைந்து தீப்பந்தம் சுற்றும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இவ்விழாவில், இந்தியா மற்றும் இலங்கையின் தென்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சுற்றுப் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய 35 மாணவ, மாணவிகள் அதிதிகளால் கௌரவளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் அவர்கள், இன்று இங்கு காட்சிப்படுத்தப்படும் பாரம்பரிய வீரக்கலைகள், தற்காப்புக் கலைகள் மற்றும் விளையாட்டுக்கள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அல்லவென்றும், அவை எமது வரலாற்றின் உயிருள்ள ஆவணங்கள் மற்றும் வாழ்வியல் தத்துவத்தின் அடையாளங்கள் எனவும் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் எமது வீடுகளே பள்ளிகளாகவும் குடும்பங்களே பல்கலைக்கழகங்களாகவும் இருந்து கற்பிக்கப்பட்ட இக்கலைகளை, இன்று கழகங்கள் அமைத்துப் பயில வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்றார். மேலும், இத்தகைய பாரம்பரிய வீரக்கலைகளும் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகளாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், இளம் பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்பது தன்னம்பிக்கையையும் சுயக்கட்டுப்பாட்டையும் வளர்க்கும் எனவும் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்குக் கலைகளை மட்டுமன்றி ‘ஒழுக்கத்தையும்’ முதன்மைப்படுத்திப் பயிற்றுவித்து, அண்மையில் 7ஆம் நிலைக் கறுப்புப் பட்டி மற்றும் ‘சிலம்பம் செம்மல்’ விருதுகளைப் பெற்ற பிரதம ஆசான் சூசைநாதர் யசோதரன் (பாபு மாஸ்டர்) அவர்களின் அர்ப்பணிப்பை ஆளுநர் தனது உரையில் வெகுவாகப் பாராட்டினார்.

ஒழுக்கமில்லாத திறமை நீண்டகாலம் மதிப்பைப் பெறாது எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இத்தகைய பாரம்பரிய விளையாட்டுக்களை மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் உள்வாங்குவது குறித்து விளையாட்டுத் திணைக்களம் சாதகமாக ஆராயும் என உறுதியளித்தார்.

தனது உரையின் நிறைவாக, ‘வேர்களை மறக்காத மரம்தான் புயல்களையும் தாங்கி நிற்கும்;, தனது பாரம்பரியத்தை மறக்காத சமூகம்தான் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். அத்தகைய நிலைத்த சமூகத்தை உருவாக்கும் பயணத்தில் இன்றைய இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும்’ என்று மனமார வாழ்த்தி ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, உலக தற்காப்புக் கலைமன்றங்களின் ஒன்றியத்தின் சமாசத் தலைவர் இளங்குமரன் அவர்கள் லண்டனிலிருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார். ஆளுநருடன் இணைந்து மற்றுமொரு பிரதம விருந்தினராகக் கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க கலந்துகொண்டார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ இமக்குலேற்றா புஸ்பானந்தன் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பா.முகுந்தன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.