students fund sin

பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்), மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆளுநர் தனது உரையில், இலங்கையிலேயே 5 மாவட்டங்களைக் கொண்ட ஒரே மாகாண சபை இதுவாகும். யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள மாணவர்கள் அந்தந்தக் கிராமப் பாடசாலைகளையே முழுமையாக நம்பியுள்ளனர். இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளான நீங்கள், அலுவலகங்களுக்குள் முடங்கி இருக்காது, அடிக்கடி களத்தரிசிப்பு மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகளை நேரில் கண்டு, எமது நிதி ஒதுக்கீடுகள் ஊடாக அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை இடைநிறுத்தும் நிலை ஏற்படக்கூடாது.

அமைச்சின் சுற்றறிக்கையையும் மீறி, பாடசாலை நிர்வாகங்கள் நிதி அறவீட்டுக்கு புதிய வழிகளைக் கையாள்கின்றன. பெற்றோரின் பெயரிலோ, பழைய மாணவர் சங்கங்களின் பெயரிலோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ நிதிகள் பெறப்படுகின்றன. யாழ்ப்பாண நகரப் பாடசாலைகள் சிலவற்றில் கூட பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. கௌரவ பிரதமர் அவர்களே ‘பெற்றோரிடம் பணம் அறவிட வேண்டாம், திறன்பலகைகள் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ள நிலையில், இச்செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. இவ்வாறு பெறப்படும் நிதிகளுக்கு உரிய கணக்கறிக்கைகளோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை. நன்கொடையாகப் பெறப்படும் பொருட்கள் பாடசாலை இருப்புப் பதிவேட்டில் பதியப்படுவதில்லை. களத் தரிசிப்புக்களின் போது இவற்றைக் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், அவர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை உள்ளது. விசாரணைகளை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும். அதேவேளை, எதிர்காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்படும்போது, வெறும் பணிமூப்பு மட்டுமன்றி, திறமையையும் அடிப்படையாகக் கொண்டே முன்னுரிமை வழங்கப்படும், என்றார்.

மாணவர்களிடம் பரீட்சைக் கட்டணம் அறவிடக் கூடாது எனவும், அதற்கான செலவை மாகாண சபையே ஏற்கும் எனவும் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டியதுடன், முதலாம் தவணைப் பரீட்சையை பாடசாலைகள் நடத்தினாலும் அதற்கான நிதியை மாகாணம் வழங்கும் எனத் தெளிவான அறிவுறுத்தல் இதன்போது வழங்கப்பட்டது.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது. இதனை வழங்குவது தொடர்பில் ஆளுநர் சாதகமான சமிக்ஞையை வெளியிட்டார்.

மாகாண மட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகளைப் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து, கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கோட்டக் கல்வி பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறையால் பாடசாலை அதிபர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளே இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்தார்.

பதில் கடமைக்காக வேறு நிலையங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்குரிய கொடுப்பனவு வழங்கப்படும் என கலந்துரையாடலின்போது உறுதி வழங்கப்பட்டது.

களத்தரிசிப்புக்குச் செல்வதற்கான வாகனப் பற்றாக்குறை குறித்து அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்படும்போது சங்கத்தின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.