pollice DIG – sinhala

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ மூலமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து, காணி மோசடிகள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்குப் பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடரவேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்பாடின்றி இடம்பெற்று வருவதாகவும், சில பகுதிகளுக்குப் பொலிஸாரால் கூடச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், அப்பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அதிரடிப் படையினரின் உதவியைக் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அவசியம் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ‘வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்காக இங்கு சில வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான ஆவணங்களைப் பெறுவதற்காகவும் சிலர் திட்டமிட்டு இத்தகைய வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர், என்ற தகவளையும் வெளியிட்டார்.

பாடசாலைச் சூழலில் மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார். அதனை உடனடியாகச் செயற்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் முகவர்களிடம் ஏமாறுவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணம் பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், இடர் முகாமைத்துவப் பிரிவினருடன் இணைந்து இடர்தணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் மாகாண நிர்வாகத்துக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இதன்போது உறுதியளித்தார்.