40 probation sin

வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களின் உண்மை நிலையை நேரில் கண்டு உணர்ந்து, அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஆளுநர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களை என்னுடன் களப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதன் பிரதான நோக்கம், அம்மக்களின் வாழ்வியல் சவால்களை அதிகாரிகள் நேரில் கண்டு, அவர்களுக்கான சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதலுடன் காத்திரமான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே ஆகும். எனவே, மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளைத் தவறாது நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டங்கள் அமைய வேண்டும்.

பல்வேறு மருத்துவமனைகளில் நிலவும் சிறிய குறைபாடுகள் தொடர்பில் பல கோரிக்கைகள் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை உடனடித் தேவையாகக் கருதி நிவர்த்தி செய்ய வேண்டும். அதேவேளை, கடந்த காலங்களில் கட்டப்பட்ட பல அரச கட்டடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. எனவே, புதிதாகக் கட்டடங்களை அமைத்து நிதியை விரயமாக்குவதை விடுத்து, பயன்பாடற்றுக் கிடக்கும் கட்டடங்கள் வேறு திணைக்களங்களுக்கு உரியதாக இருந்தாலும், அவற்றைப் பெற்று வினைத்திறனாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆளுநர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களில் பிரதேச மருத்துவமனைகளின் அபிவிருத்திகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த கால பேரிடர்களின் போது மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்டதையும், தொடர்பாடல் துண்டிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு செய்மதித் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, அனலைதீவு பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையான நோயாளர் காவு வண்டிப் படகுக்குரிய அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் வெளியிட்டார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2026ஆம் ஆண்டுக்காகத் திணைக்கள ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் உத்தேச திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதாரச் சேவைகள் திணைக்களம்: 1071 மில்லியன் ரூபா

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்: 264 மில்லியன் ரூபா

சுதேச வைத்தியத் துறை திணைக்களம்: 226 மில்லியன் ரூபா

மேற்படி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள காத்திரமான திட்டங்கள் குறித்து துறைசார் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் திட்டமிடல்), மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் துறைசார் மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.