36 -agri review sin

வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் என எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வியாழக்கிழமை (18.12.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், அண்மையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை கருத்திற் கொண்டு, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளில் மாற்றங்களைச் செய்வதற்கு நிதி ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதற்கமைவாக, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களை விரைவாக மேற்கொண்டு இறுதிப்படுத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

2025ஆம் ஆண்டு எமது நிதி ஒதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளைத் தொகுத்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியுதவிகள் எத்தகைய உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் நிதி ஆணைக்குழுவுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, மாகாணத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ததற்கும் அப்பால், எவ்வளவு மேலதிக உற்பத்தியானது மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். விவசாயத் திட்டங்களின் இறுதி இலக்கானது மக்களின் வாழ்வாதார உயர்வாகவும், மாகாணத்தின் உற்பத்தி அதிகரிப்பாகவும் அமைதல் வேண்டும் என ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2026ஆம் ஆண்டுக்காகத் திணைக்கள ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள்:

விவசாயத் திணைக்களம்: 619 மில்லியன் ரூபா
நீர்ப்பாசனத் திணைக்களம்: 604 மில்லியன் ரூபா
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்: 377 மில்லியன் ரூபா
நன்னீர் மீன்பிடி அலகு: 75 மில்லியன் ரூபா

இந்த நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து துறைசார் பணிப்பாளர்கள் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினர். இதன்போது, சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் தேவைக்கேற்ப மாற்றியமைப்பது குறித்தும் ஆளுநர் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் திட்டமிடல்), மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் துறைசார் மாகாணப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.