48 investment sinhala

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, வடக்கு மாகாணத்தில் இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ (The Management Club – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு’ (Northern Investment Summit 2026) தொடர்பான விசேட முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் இன்று (22.12.2025) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் நிலையான அபிவிருத்தியையும், முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியையும் முன்னெடுப்பதற்கான எமது கூட்டு முயற்சியின் முக்கிய மைல்கல்லாக இந்த ஒன்றுகூடல் அமைகின்றது. மனித வளம், கலாசார மரபுரிமை மற்றும் பயன்படுத்தப்படாத பொருளாதார சாத்தியக்கூறுகள் ஆகியவற்றில் இப்பிராந்தியம் வளம் மிக்கதாக உள்ளது. எனினும், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த சவால்களிலிருந்து அது இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.

நாங்கள் தயாராகி வரும் இம்மாநாடானது, வெறுமனே முதலீடுகளை ஈர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, சமூகங்களை உயர்த்துதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் இது பிரதான இலக்காகக் கொண்டுள்ளது,’ என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உச்சிமாநாட்டின் துறைசார் முன்னுரிமைகளை, வடக்கின் உண்மையான தேவைகளுடன் ஒருங்கிணைக்க அபிவிருத்திப் பங்காளிகளின் ஆலோசனைகளையும் அவர் கோரினார்.

நிகழ்வில் உரையாற்றிய ‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ அமைப்பின் தலைவர் கௌஷhல் ராஜபக்ச, இம்மாநாட்டின் பிரதான நோக்கங்களைத் தெளிவுபடுத்தினார். வடக்கின் பொருளாதாரத் தூண்களாகக் கருதக்கூடிய கல்வி, விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் வலுசக்தி ஆகிய நான்கு விடயங்களைப் பிரதானமாகக் கொண்டு இந்த முதலீட்டாளர் மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலாத்துறை தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகளும் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை முதலீட்டாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஒழுங்கமைப்புகள் குறித்து ‘த மனேஜ்மன்ட் க்ளப்’ முகாமைத்துவ சபையின் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் விரிவான விளக்கத்தை அளித்தார்.

இக்கலந்துரையாடலில் பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள், இருதரப்பு உதவி வழங்கும் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐ.நா. முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் நேரிலும், இணையவழியிலும் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.