வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (30.11.2025) மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்தவண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாகாணத்தின் தற்போதைய நீர்ப்பாசன நிலவரம்:
இரணைமடு குளத்தின் நிலை:
நேற்று சனிக்கிழமை (29.11.2025) நண்பகல் 40 அடி 3 அங்குலமாக காணப்பட்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டமானது, இன்று மாலை 5.00 மணியளவில் 37 அடியாக குறைவடைந்துள்ளது. குளத்துக்கான நீர் வரத்து மணித்தியாலத்துக்கு 0.794 மில்லியன் கன மீற்றராக குறைவடைந்துள்ளதுடன், ஆரைக்கதவுகள் படிப்படியாக மூடப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதே அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சேதவிவரங்கள்:
மன்னார் மாவட்டத்திலுள்ள வெலிமருதமடு குளம் மற்றும் கூராய்க்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளன. வெலிமருதமடு குளத்துக்கு மேலுள்ள பெரியமடு குளத்தின் வான் நீர் பெருமளவில் வந்தமையே இதற்குக் காரணமாகும். அதேவேளை, பறங்கியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூராய் குளம் உடைப்பெடுத்துள்ளது.
மேலும், அதிக மழைவீழ்ச்சி மற்றும் வான் பாய்தல் காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு, வவுனியா குளம், மகாகச்சகொடிய குளம், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முத்துஐயன்கட்டு குளம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு ஆகியவற்றின் வான் பாதையிலுள்ள தடுப்பணைகள் உடைப்பெடுத்துள்ளன. முத்துஐயன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மூடப்பட்டுள்ள போதும், வான் பாதையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
குளங்களின் முழுமையான உடைப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வவுனியா மாவட்டத்திலுள்ள கல்மடு, பெரியதம்பனை, அலியாமருதமடு, கனகராயன்குளம், மன்னார் மாவட்டத்திலுள்ள பெரியமடு, கிளிநொச்சியிலுள்ள புழுதியாறு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வவுனிக்குளம், உடையார்கட்டு, தட்டயர்மலைக்குளம் ஆகியவற்றின் வால்கட்டு பகுதிகள் வெட்டப்பட்டு நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது மழைவீழ்ச்சி மிகவும் குறைவடைந்துள்ளதுடன், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் களத்துக்குச் சென்று சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், என்று அந்த அறிக்கையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


