முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கலந்துரையாடல் நடைபெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், நீர்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்புக்குள் உள்ள புலிக்குளம் கடந்த காலங்களில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்கு குடிநீர் வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்ப்பில்லை எனவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டியைச் சேர்ந்த மக்களுக்குரிய வாழ்வாதாரத்துக்கு நீர் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.
புலிக்குளத்தின் கொள்ளவு மற்றும் அதன் புனர்நிர்மாணம் தொடர்பில் கடந்த காலங்களில் மத்திய அரசின் நீர்பாசனத் திணைக்களத்தால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
புலிக்குளத்தை எதிர்காலத்தில் மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் பொறுப்புக்குள் உள்வாங்குவதென்றும், பல்கலைக்கழத்துக்கான நீர்த்தேவைக்கு முன்னுரிமை வழங்குவதெனவும், அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் நீர் வழங்குவதெனவும் அதனை அடிப்படையாகக் கொண்டும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை அடிப்படைய வைத்துக்கொண்டும் மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு மாத காலத்தினுள் அறிக்கை சமர்பிப்பதற்கு ஏதுவாக வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று ஆளுநரால் நியமிக்கப்பட்டது.
இதன் பின்னர் கல்மடுக்குளத்தின் கீழான விவகாரம் ஆராயப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கல்மடுக்குளத்தின் கொள்ளவு மட்டத்தைப் பொறுத்து எதிர்காலத்தில் சிறுபோகத்தின் அளவை அதிகரித்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.