மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகின்றது. தலைமைத்துவப் பண்பு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பாடப்புத்தகக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் (Co-curricular Activities) மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
தேசிய மாணவர் படையணியின் (National Cadet Corps) ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் அப்படையணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) பிற்பகல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்,
“எமது சமூகம் பாடப்புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் மையமாக வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. கல்விக்கு அப்பால் விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படையணியின் பயிற்சிகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தினால்தான் அவர்கள் சிறந்த ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளாக உருவாகுவதோடு, அவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் உருவாகும்.
சில பாடசாலைகளின் அதிபர்கள் தமக்கு ஒத்துழைப்புகளை வழங்கினாலும், இன்னும் சில பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளுக்குத் தகுந்த ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என்றும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதில்லை என்றும் படையணியினர் என்னிடம் குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களை அழைத்து இந்தத் தெளிவுபடுத்தல் கூட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தேசிய மாணவர் படையணியினரால் தமது செயற்பாடுகள் தொடர்பான விசேட முன்னளிக்கை (Presentation) செய்யப்பட்டது.
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பு (Leadership Training), தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதே இப்படையணியின் பிரதான இலக்காகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் இது ஒரு சிறந்த அடித்தளமாக அமைகின்றது என இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்கென மாணவர்களுக்குக் குழு மட்டம், படைப்பிரிவு மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் கணிப்பீடுகளை நடத்துதல், அணிநடை , உடற்பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, முன்வைப்புப் பயிற்சி, கலை நிகழ்ச்சிப் பரீட்சை, விடுதிப் பராமரிப்பு, தன்னம்பிக்கை மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி ஆகியன வழங்கப்பட்டுப் பரீட்சைகள் நடாத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், வருடாந்த தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள், சார்க் நாடுகளுக்கான சுற்றுலா போன்ற நிகழ்வுகளும் தங்களது செயற்றிட்டங்களில் உள்ளடங்கியிருப்பதாகத் தேசிய மாணவர் படையணியினர் சுட்டிக்காட்டினர்.
தேசிய மாணவர் படையணியானது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுவதால், யாழ்ப்பாணத்தில் இதனை இராணுவத்தினரோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதாகவும், இது யுத்தத்தில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்களை உருவாக்கும் படையணி என்ற தவறான எண்ணப்பாடு பலரிடம் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் , “இது யுத்தத்தில் களமிறங்கும் இராணுவச் சிப்பாய்களை உருவாக்கும் படையணி அல்ல. தேசிய மாணவர் படையணியின் பிரதான நோக்கம் ஒழுக்கமும் தலைமைத்துவமும் மிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். இதற்கும் இராணுவப் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். மக்கள் மத்தியில் உள்ள இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளால் தமது தேசிய மாணவர் படையணிச் செயற்பாடுகள் தொடர்பான முன்னளிக்கை ஒன்றும் செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர். பிரேமதிலக்க, தேசிய மாணவர் படையணியின் பயிற்சிப் பிரிவுப் பொறுப்பாளர், வடக்கு மாகாணப் பொறுப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.




