வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களது முதலீட்டுத் திட்டங்களுக்கான நடைமுறைகளை இலகுபடுத்தும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

Management Club Investment Forum உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில் அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி கையாள்வதற்காக, வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுவரும் ” One Stop Shop Investment Portal – (OSSI Portal) இணையத்தளத்தில் முதலீட்டுத் திட்டங்களைப் பதிவேற்றுதல் மற்றும் குறித்த இணையத்தளத்திற்கான தொழில்நுட்ப ஆதரவு (Technical Support) என்பன தொடர்பிலும் அதன் கட்டமைப்புக்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

“வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிர்வாக ரீதியாக முதலீட்டாளர்களுக்கான சேவைகளை இலகுபடுத்தினால் மாத்திரமே பல முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இங்கு முதலிட முன்வருவார்கள். அவர்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற கால, நேர விரயங்கள் ஏற்பட்டால், அவர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ளாது திரும்பிச் சென்றுவிடும் அபாயம் காணப்படுகின்றது.

இதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே, வடக்கு மாகாணத்திலுள்ள மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகக் கட்டமைப்புகளை ஒன்றிணைத்து, இத்திட்டத்தை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட இலகுவான பொறிமுறையினூடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

இதன்போது இவ் இணையத்தளத்தில் அங்குரார்ப்பண நிகழ்வினை இம்மாத இறுதிப்பகுதியில் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், NIS 26 மற்றும் TMC அமைப்பின் துணைத் தலைவர் திருமதி சாந்தி பகீரதன், OSSI Portal இன் வவுனியாப் பல்கலைக்கழக இணைப்பாளர் திரு. சகுந்தரராஜன் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டச் செயலகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.