“கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்ற போது, கண்ணுக்குத் தெரிகின்ற பாத்தீனியத்தை ஏன் உரிய துறைசார்ந்தவர்களால் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாத்தீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) முற்பகல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பாத்தீனிய ஒழிப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகக் கட்டமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது விசேட கருத்துகளைத் தெரிவித்த ஆளுநர்,
“பாத்தீனிய ஒழிப்புத் தொடர்பில் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அனைவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கு முன்வருவார்கள். இங்கு முதலாம், இரண்டாம் படிமுறைகளோடு, அதாவது மஞ்சள் அறிவித்தல் வழங்குவதோடு சட்ட நடைமுறைப்படுத்தல் நின்றுவிடுகிறது. முதலில் பாத்தீனியம் உள்ள இடங்களை அடையாளங்கண்டு தொடர்புடைய நில உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் அறிவித்தல், சிவப்பு அறிவித்தல் எனத் தொடர்ச்சியாகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாத்திரமே மக்கள் மத்தியில் இதன் பாரதூரமான விளைவுகள் குறித்த முன்னெச்சரிக்கை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“பாத்தீனியம் மிகவும் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும். இதனை இனங்கண்டு தொடர்ச்சியாக அழிக்க வேண்டும். ஒருமுறை அழித்துவிட்டோம் எனச் சாதாரணமாகக் கைவிட்டுவிட்டால், அந்த இடத்தில் பாத்தீனியம் மீண்டும் உருவாகும். ஏனெனில் அதன் வேர்களும் விதைகளும் மிகவும் வீரியம் மிக்கவை. பாத்தீனியம் வளர ஆரம்பித்ததும், அது விதைகளை உருவாக்குவதற்கு முன்னரே அதனை அழித்துவிட்டால் இலகுவாகக் கட்டுப்படுத்தலாம். தவறினால், விதைகள் வெடித்துப் பரவி அருகில் புதிது புதிதாகக் களைகள் உருவாகிவிடும். எனவே, தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே பாத்தீனியத்தை முழுமையாக ஒழிக்க முடியும்” என வலியுறுத்தினார்.
இக் கலந்துரையாடலில் மூன்று மாாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும், ஏப்பில் மாத இறுதி வாரத்தில் பாத்தீனிய ஒழிப்பு வாரத்தை மேற்கொள்வது என்றும் அதற்கு ஏற்றவகையில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் மாகாண திணைக்களங்களின் பங்குபற்றலுடன் முன்னாயத்த கூட்டங்களை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட கடற்படைக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



