வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது

மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணமானது சகல இன, மத மக்களின் பாரம்பரியங்களையும் சமமாக மதித்து, அவர்களது பண்டிகைகள் மற்றும் விழாக்களைச் சிறந்த முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (16.03.2026) இடம்பெற்ற விசேட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்கள் இஸ்லாமிய கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், அரங்கில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“ரமழான் மாதம் அருள் நிறைந்த மாதமாகும். நன்மைகள் அதிகம் செய்து, இறைவனை (அல்லாஹ்வை) அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் புனித மாதம் இதுவாகும். சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், ஆயிரம் மாதங்களை விடச் சிறப்புமிக்க ஓர் இரவைக் கொண்ட (லைலத்துல் கத்ர்) மாதமாகவும், புனித குர்ஆன் அருளப்பட்ட மாதமாகவும் இந்த மாதத்திற்குப் பல சிறப்புகள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ள வணக்கங்களில் ஒன்றான நோன்பு என்பது, மற்றைய வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். நோன்பு என்பது பசி, தாகம் மற்றும் இச்சைகளை, இறைவனிடத்தில் உள்ள நற்கூலியை எதிர்பார்த்தவராகப் பகல் நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இதனை வெறும் சடங்காகக் கருதாமல், இறைவனை வழிபடும் உயரிய நோக்கத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

இறை அச்சத்தை (தக்வா) தமக்குள் ஏற்படுத்திக் கொள்வதே நோன்பின் பிரதான நோக்கமாகும். இறை அச்சம் என்பது இறைவனுக்குப் பயந்து அவர் அறிவுறுத்தியவைகளைச் செய்வதும், தடை செய்தவைகளைத் தவிர்த்து நடப்பதுமாகும். ஒரு நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போது பசியும் தாகமும் இருந்தாலும், இறைவனுக்குப் பயந்து எதையும் உண்ணாமலும் பருகாமலும் தவிர்த்துக் கொள்வது இந்த மனத்தூய்மையின் உச்ச வெளிப்பாடாகும். பசியோடும் தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது; இக்காலத்தில் இறைவனை மனதில் தியானித்திருத்தலே சொர்க்கத்தை அடையச் சிறந்த வழி என மார்க்கம் கூறுகின்றது.

எல்லாச் சமயங்களும் மனித குலத்துக்குப் பொருத்தமான நல்வழியையே போதிக்கின்றன. எதிர்கால சந்ததியை நல்வழிப்படுத்தும் நன்மையான காரியங்களை நாம் அனைவரும் செய்ய வேண்டும். மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது. கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுவது போன்று, நிகழ்காலச் செயற்பாடுகளால் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே, மதங்கள் காட்டும் நல் நெறிமுறைகளைப் பின்பற்றி மனிதகுலம் முழுவதும் மகிழ்வுடன் வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வவுனியா மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர், மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.