இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிராந்திய மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், வவுனியா மற்றும் தெல்லிப்பளைக்கு விசேட தர ஆளணியை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்க மருந்தாளர் சங்கத்தினரால் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், வடக்கு மாகாணத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள 14 அரசாங்க மருந்தாளர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மருந்து களஞ்சியறைகளின் தேவைகள் மற்றும் மருந்து விநியோக வாகனங்களின் பற்றாக்குறை தொடர்பிலும் சங்கப் பிரதிநிதிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இக்கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துத் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த ஆளுநர், தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரியில் பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகளுக்கான (RMSD) மருந்து களஞ்சியங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசாங்க மருந்தாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பான கோரிக்கை விரிவாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, நிரல் அமைச்சின் (Line Ministry) சுற்றறிக்கைக்கு முரணாகாத வகையில் இக்கோரிக்கையை ஆராய்ந்து பொருத்தமான தீர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் கணக்காளர் மற்றும் இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



